22/08/2023
' ரிஹ்லா ஷீதும் நானும்'
--- என்.அருண் பிரகாஷ் ராஜ் ,வரலாற்று ஆய்வு மாணவர், அம்பேத்கர் பல்கலைக்கழகம்,புதுதில்லி
---------------------
எஸ்.எம். கமால், செ. திவான், ராஜா முகமது, சூசன் பேலி முதலான ஆய்வறிஞர்கள், தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் செதுக்கியதில் இஸ்லாம், முஸ்லீம்களின் பங்கு என்ன என்பதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.
எனினும், இத்தகைய அறிஞர்களின் நூல்கள் மிக சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அறியப்பட்டும், பேசப்பட்டும் வந்துள்ளது. அக்கருத்துக்களை வெகுஜனப்படுத்துவதற்கான முயற்சிகளில் முக்கியமானது கோம்பை அன்வரின் ‘யாதும்’ என்கிற ஆவணப்படம். அது, முஸ்லீம்கள் எவ்வாறு தமிழ் பண்பாட்டின் அங்கமாக இருந்து வருகிறார்கள் என்பதை மிக அழகாகவும், சுவாரசியமாகவும் பதிவு செய்துள்ளது. கோம்பை அன்வரின் முயற்சி என்னைப் போன்ற பலருக்கும் தமிழ் நிலத்தின் அதிகம் பேசப்படாத விசயங்களை அறிமுகப்படுத்தியது.
எட்டாம் நூற்றாண்டிலேயே வணிகத் தொடர்புகளினூடாக இங்கு இஸ்லாம் வந்த வரலாறு, திராவிடக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல்கள், இந்துக்களும் முஸ்லீம்களும் மாமா, பெரியப்பா, மருமகன் என பல ஊர்களில் உறவுமுறை சொல்லி அழைக்கும் பழக்க-வழக்கம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியது. இப்பண்பாட்டு விழுமியங்கள் குறித்து இன்னும் ஆழமாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் சிறு-சிறு பயணங்களை நானும் நண்பன் பாரதியும் மேற்கொண்டோம். ஆனால், சரியான வழிகாட்டல் எங்களுக்கு கிடைக்காததால் அப்பயணங்கள் முழுமையடையவில்லை.
எங்களுடைய நீண்ட நாள் ஏக்கத்தை அகற்றும் விதமாகவே இராமநாதபுர மாவட்டத்தில் இஸ்லாமிய பாரம்பரியத்தை தேடும் ‘ரிஹ்லா’ பயணம் அமைந்தது.
இரண்டு நாட்கள் (ஆகஸ்டு 19, 20) மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்தில், ஏற்பாட்டாளர்களையும் சேர்த்து மொத்தம் 17 நண்பர்கள் கலந்துக் கொண்டனர். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பொறியியலாளர்கள், வணிகர்கள் என வெவ்வேறு பின்புலத்தை சேர்ந்த எங்களின் சக பயணிகள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் புறப்பட்டு வந்திருந்தார்கள்.
அனைவருமே வரலாற்றின் மீதும், இஸ்லாமியப் பண்பாட்டின் மீதும் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். பயணத்திற்கு ஒரிரு வாரங்களுக்கு முன்பே, பயண ஏற்பாட்டாளர்கள், எங்களைத் தயார்ப்படுத்தும் கட்டுரைகளையும், நூல்களையும் பகிரத் தொடங்கிவிட்டனர். எனவே பார்க்கவிருக்கும் இடங்களின் முக்கியத்துவம் பற்றிய குறைந்தபட்ச புரிதலேனும் பயணிகள் அனைவருக்கும் இருந்தது.
முதல் நாள் காலை சரியாக எட்டு மணிக்கெல்லாம் குளித்து, தயாராகி விடுதியில் இருந்து கிளம்பிவிட்டோம். காலை சிற்றுண்டி முடிந்தது எங்களுடைய முதல் இலக்கு பெரியபட்டினம்.
வரலாற்றில் பராக்கிரமப்பட்டினம் என அறியப்பட்ட இவ்வூர் பாண்டியர்களின் முக்கிய துறைமுகமாக இருந்ததோடு, முத்து வணிகத்திற்கும், அரபுக் குதிரைகள் வியாபாரத்திற்கும் ஒரு காலத்தில் பெயர்பெற்றிருந்தது.
இப்னு பதூதா, மார்க்கோ போலோ போன்றவர்கள் பெரியபட்டினம் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். இவ்வூரைப் பற்றிய வரலாற்று நூலை எழுதத் தொடங்கிய எஸ்.எம். கமால் அவர்கள் அதனை நிறைவு செய்யும் முன்பாகவே மறைந்துவிட்டார். அவர் தொடங்கிய பணியை முடித்தவர்களில் ஒருவரான மு.பத்ருதீன் எனும் பெரியவரை அவரின் வீட்டில் சந்தித்து உரையாடினோம்.
அந்நூலின் (தமிழக வரலாற்றில் பெரியபட்டினம்) பிரதிகள் சிலவற்றையும் அவரிடம் இருந்து வாங்கினோம். பிறகு, பெரியபட்டினத்தில் உள்ள பழமையான பள்ளிவாசலுக்கு சென்றோம். திராவிட கட்டிடக்கலையின் கூறுகளைக் கொண்டுள்ள மஸ்ஜிதை முதன்முதலாக காணும் வாய்ப்பு அன்றுதான் எனக்கு கிடைத்தது.
மதிய உணவிற்கு செல்லலாம் என புறப்பட்ட போது, அங்கிருந்தவர்கள் சிலர், மிக அன்மையில் கண்டெடுக்கப்பட்ட கல் நங்கூரத்தை நிச்சயம் நாங்கள் காணவேண்டும் என சொன்னார்கள். எனவே, அப்பள்ளிவாசலுக்கு பின்புறம், புதர்களுக்கு இடையே உள்ள அக்கல் நங்கூரத்தை சென்று பார்வையிட்டப் பிறகு அப்பகுதியில் இருந்துக் கிளம்பினோம். நாங்கள் வருவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் நங்கூரத்தை ஆய்வு செய்திட வந்திருந்தனர்.
சுவையான மீன் குழம்பும், பொறித்த மீனும் எங்களுக்கு மதிய உணவாகக் கிடைத்தது. கடல் உணவினை காட்டிலும் மற்ற இறைச்சி வகைகளையே விரும்பிடும் எனக்குகூட தின்பதற்கு இன்னொரு மீன் துண்டு கிடைக்காதா என்றிருந்தது. பெரியபட்டினத்தில் உள்ள ஒரு சிறிய கடையில் தயார்படுத்தப்பட்ட உணவு, எங்கள் அனைவரின் நாவையும், வயிற்றையும் திருப்திப்படுத்தியது.
உண்ட மயக்கமும், சுட்டெரிக்கும் வெயில் கொடுத்த சோர்வும், வேனில் ஏறியதும் தூங்க வைத்துவிட்டது. கண் விழித்த போது, பாம்பன் பாலத்தை கடந்து மிக வேகமாக தனுஷ்கோடியை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம்.
1964-ல் வீசிய பெரும் புயலால் அழிக்கப்பட்ட தனுஷ்கோடியின் ஒரு புறம் ஆக்ரோஷமாகவும் மறுபுறம் அமைதியாகவும் வங்கக்கடல் இரு முகங்காட்டிக் கொண்டிருந்தது.அங்கிருந்து இலங்கை சில கிலோ மீட்டர் தூரம்தான் என்கிறார்கள்.
முன்பெல்லாம், தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் படகுப் போக்குவரத்து இருந்ததோடு, நீந்தியே கடலைக் கடப்பவர்களும் இருந்தார்களாம். வெறும் தொழிலுக்காக மட்டுமின்றி, சினிமா பார்க்க வேண்டும் என்பதற்காகவும்கூட இலங்கையில் இருந்து நீந்தி வந்தவர்கள் உண்டு என ஒரு நண்பர் சொன்னார்.
கடலில் கால்களை நனைத்த பிற்பாடு பழைய தனுஷ்கோடியின் நினைவாக நிற்கும் அழிந்துப்போன தேவாலயம்,ரயில் நிலையத்தின் எச்சங்களை சென்று பார்த்தோம். இரு சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ள தேவாலயத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.
கனத்த உணர்வினை ஏற்படுத்திய இக்காட்சியினை கண்ட பிறகு, அங்குள்ள ஒரு கடையில் குளிர்பானம் பருகினோம். எங்களுக்கு சர்பத் சோடா போட்டுத் தந்த கடைக்கார பாட்டியம்மா தனுஷ்கோடிப் புயலில் உயிர்ப் பிழைத்த மிகச் சிலரில் ஒருவர். அவரது கணவரான நீச்சல் காளி, புயல் சமயத்தில் கடலில் மூழ்கி சாகக்கிடந்தவர்களில் சிலரை காப்பாற்றியதற்காக இன்றும் உள்ளூர்வாசிகளால் நன்றியோடு நினைவுக்கூறப்பட்டு வருகிறார். 2010 வரை வாழ்ந்த நீச்சல் காளி அவர்கள் கடலில் தொடர்ந்து 14 மணி நேரம் நீந்தி, 27 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளார்.
இராமேஸ்வரம் வெறும் ஹிந்து அடையாளங்களையும், தொன்மங்களையும் மட்டுமே தாங்கியுள்ள இடமல்ல என்பதையும் இப்பயணம் எனக்கு உணர்த்தியது.
தனுஷ்கோடியையும், இலங்கையையும் இணைக்கும் விதமாக அமைந்துள்ள குறுகலான நிலப்பரப்பு கடலுக்கடியில் இன்று மூழ்கியுள்ளது. இந்துக்கள் இதனை இராமர் வானரங்களின் உதவியோடுக் கட்டிய பாலம் என்கிறார்கள். ஆனால், பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த அல்பிரூனி எனும் மாபெரும் அறிஞர் தன்னுடைய நூலில் இந்நிலத்தை ஆதம் பாலம் என்கிறார்.
மானுட குலத்தின் ஆதிபிதாவாகிய ஆதம் இங்கு வருகை தந்ததாகவும், இப்பாலத்தில் நடந்ததாகவும் இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது. மேலும், ஆதமின் இரு மகன்களான ஆபிலும், காபிலும் இராமேஸ்வரத்தில் இறந்ததாக கூறப்படுவதோடு, அவ்வூர் இரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தர்ஹாவில்தான் அவர்கள் இருவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஆபில்-காபில் தர்ஹாவை நாங்கள் கண்ட பிற்பாடு, வண்டி நேரே இராமேஸ்வரம் கோவில் வாசலுக்கு சென்றது. முத்துராமலிங்க சேதுபதியால் கட்டிமுடிக்கப்பட்ட கோவிலின் பிரம்மாண்டமான மூன்றாம் பிராகரத்தை வியப்புடன் பார்த்துவிட்டு, மிகுந்த பசியுடன் விடுதியை நோக்கி கிளம்பினோம்.
வழியில், ஆஃப்ரிக்காவை பூர்விகமாகக் கொண்ட பொந்தன்புளி மரமொன்றைக் கண்டோம். 2000 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடிய இம்மரங்கள் தங்களுக்குள் ஆயிரம் லிட்டர்கள் தண்ணீரை சேமித்துக்கொண்டு, வறட்சி காலங்களில் மக்களின் தாகத்தை தீர்க்கின்றன. ஆஃப்ரிக்க, மடகாஸ்கர் பகுதிகளில் இருந்து இம்மரங்களின் விதைகளைக் கொண்டுவந்து இராமநாதபுர சீமையின் பல பகுதிகளில் அறபு நாட்டு வணிகர்கள் தூவியதாக சில ஆய்வாளர்கள் சொகிறார்கள். தங்கள் இறக்குமதி செய்யும் குதிரைகளுக்கு தீவினமாகக் கொடுக்க இம்மரத்தின் இலைகளையும், காய்-கனிகளையும் பயன்படுத்தினார்கள் அவ்வணிகர்கள்.
இரண்டாம் நாள் காலை பயணக் களைப்பு மிகுதியாக இருந்தாலும், எங்களின் கண்டிப்பான ஏற்பாட்டாளர்களின் அன்பு கட்டளையின் காரணமாக அனைவருமே எட்டு மணிக்கு முன்பாகவே குளித்து தயாராகிவிட்டோம்.
அன்றைய தினம் மதுரையில் எடப்பாடியார் அதிமுக மாநாட்டை நடத்துவதால் எங்களுடைய உள்ளூர் பயணத்திற்கு வாகனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. முதல் தினம் போல அனைவரும் ஒன்றாக அமர்ந்து செல்வதற்கான் வேன் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, மூன்று ஆம்னி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
பீமா விலாஸில் காலை டிபனும், காஃபியும் சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் இராமநாதபுர மாவட்ட அருங்காட்சியத்திற்கு சென்றுவிட்டோம். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட அருங்காட்சியங்கள் எப்படி சுமாராக இருக்குமோ அப்படிதான் இவ்வூரிலும்.
ஆங்காங்கு கண்டுபிடிக்கப்பட்ட சிற்பங்கள், நாணயங்கள், பானைகள் முதலானவை காட்சிப்படுத்தப்பட்டன. முதல் மாடியில் உள்ள அருங்காட்சியத்திற்கு ஏறி செல்லும் படிக்கட்டிற்கு அருகே, இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டுப்பிடிக்கப்பட்ட கல்வெட்டினை பார்வைக்கு வைத்திருந்தார்கள். 13-ம் நூற்றாண்டை சேர்ந்த அக்கல்வெட்டு, ஐந்நூற்றவர் வணிகக் குழு, யூதர்களின் பள்ளிக்கு நில தானம் வழங்கிய செய்தியைக் கூறுகிறது. இதனூடாக, பெரியபட்டினத்தில் யூதர்களும், அவர்களின் வழிபாட்டிடங்களும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.
அருங்காட்சியத்திற்கு அருகாமையில் உள்ள சேதுபதி மன்னர்களின் இராமலிங்க விலாசம் அரண்மனைதான் எங்கள் பயணத்தின் அடுத்த இலக்கு. சேதுபதி மன்னர்களின் தலைநகரை போகலூரில் இருந்து, இராமநாதபுரத்திற்கு மாற்றியக் கையோடு, இராமலிங்க விலாசம் அரண்மனையையும் எழுப்பினார் கிழவன் சேதுபதி.
சேது மன்னர்களில் குறிப்பிடத்தக்கவரான கிழவன் சேதுபதிதான், அதுவரை மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சேது நாட்டை தன்னாட்சி மிக்கதாக அறிவித்தார். நாங்கள் சென்றபோது, அரண்மனையின் வாசல் பூட்டியிருந்தது. அரண்மையை ஒட்டி ஒரு சிறு ஆலயமும், சேதுபதி அரச பரம்பரையின் வாரிசுகள் வசிக்கும் வீடும் இருந்தன. பென்ஸ் காரொன்று அவ்வீட்டின் வாசலில் நிற்க, உள்ளே யாரெல்லாம் வசித்தார்கள் என்று விசாரித்தபோது, ராணியும் அவரது குடும்பமும் இருப்பதாக சொன்னார்கள். அவர்களைப் பற்றி மேலதிக தகவல்களை பெறலாம் என நினைத்தபோது, அரண்மனையின் பிரம்மாண்ட கதவுகளை அதன் பராமரிப்பாளர் திறந்தார்.
இதுவரை தமிழகத்தில் அத்தகைய கட்டிடத்தை நான் இதுவரைக் கண்டதில்லை. அரண்மனையின் அனைத்து சுவர்களிலும் வண்ண ஓவியங்கள். இராமயணம், பாகவத புராணம் முதலான புராணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, தஞ்சை மன்னருக்கும் சேதுபதிக்கும் நடந்த யுத்தம், மூன்று ஐரோப்பியர்களை சேதுபதி மன்னன் வரவேற்கும் காட்சி என சில வரலாற்று நிகழ்வுகளும் ஓவியங்களாக அரண்மனை சுவர்களில் தீட்டப்பட்டிருக்கின்றன.
போதுமான வெளிச்சம் இல்லாததால் மொபையில் டார்ச்சில் அவ்வோவியங்களில் சிலவற்றை ரசிப்பதற்கே நேரம் போதவில்லை. எஞ்சிய நேரத்தில் அரண்மனையின் மற்ற அம்சங்களை பார்வையிடுகையில்தான், இராமலிங்க விலாசத்தைக் கட்டுவதற்கு சேதுபதி மன்னரின் நெருங்கிய நண்பரான வள்ளல் சீதக்காதி பொருள் அளித்ததைக் கூறும் அறிவிப்பு பலகையை காண நேர்ந்தது. வாசிப்பதற்கு சற்றே நெகிழ்ச்சியாக இருந்தது.
அரண்மனையை விட்டு கிளம்புகையில் உடன் வந்த நண்பர், தனது செல்போனில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் படத்தில், கட்டபொம்மு நாயக்கரும் கலெக்டர் ஜாக்சன் துரையும் சந்திக்கும் காட்சியை காட்டிவிட்டு சொன்னார்: “இந்த சீன் இங்கதான் எடுத்தாங்க”. அதுமட்டுமல்ல, உண்மையிலேயே அவ்விருவரின் சந்திப்பும் இராமலிங்க விலாச அரண்மனையில்தான் (1798) நடந்தது.
அடுத்ததாக, எங்களது பயணத் திட்டதில் முக்கிய இடத்தை வகித்துள்ள கீழக்கரைக்கு சென்றோம். வள்ளல் சீதக்காதி வாழ்ந்து, மறைந்த கீழக்கரையானது, வரலாற்றில் விஜயன்பட்டினம், அருந்தொகை மங்கலம், தென்காயல், வகுதை முதலான பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது.
முத்துக் குளித்தல், சங்கு குளித்தல், உப்புக் காய்ச்சுதல் போன்ற கடல் சார்ந்த தொழில்களுக்காவும், கடல் கடந்த நாடுகளுடனான வாணிபத்திற்காகவும் கீழக்கரை அறியப்படுகிறது. வணிக காரணங்களுக்காக, பல நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்திருப்பதை நினைவூட்டும் விதமாக இங்குள்ள வீதியொன்றுக்கு பன்னாட்டார் தெரு எனப் பெயரிடப்பட்டுள்ளது. கீழக்கரையை சேர்ந்த முஸ்லீம்கள் வணிகத்திற்காக மட்டுமின்றி இலக்கிய மற்றும் ஆன்மீக பணிகளுக்காக இன்றும் பரவலாக நினைவுக் கூறப்படுகிறார்கள்.
இத்தகைய சிறப்புமிக்க கீழக்கரையை அடைந்ததும், நாங்கள் சீதக்காதி கட்டிய வசந்த மண்டபத்தை நேரில் சென்று பார்த்தோம். கடற்கரையில் அமைந்துள்ள அம்மண்டபம் சிதைந்த நிலையிலே காணப்படுகிறது. அவ்வூரை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் சிலர் சீதக்காதியின் வாழ்க்கையைப் பற்றி எடுத்துரைக்கையில், ’செத்தும் கொடுத்தார் சீதக்காதி’ எனும் வாசகம் ஏன் வழங்கப்படுகிறது என நண்பன் பாரதி கேள்வி எழுப்பினான். அதற்கு இரண்டு விதமான விளக்கங்கள் எங்களுக்குக் கிடைத்தன:
அ) சீதக்காதியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற ஒருவர் தன்னுடைய வறுமை நிலையைச் சொல்லி அழுதபோது, சீதக்காதியின் தங்க மோதிரம் பூமிக்கு அடியில் இருந்து எழும்பி வந்தது.
ஆ) படிக்காசு புலவர் என்பவர் சீதக்காதி மறைந்தது தெரியாமல், அவரிடம் பரிசு பெறுவதற்காக நெடுந்தூரத்தில் இருந்து நடந்து வந்தார். படிக்காசு புலவர் தன்னிடம் வருவார் என்பதை இறப்பதற்கு முன்பே அறிந்த சீதக்காதி, அவருக்கு வேண்டிய பொருட்களை உறவினர்களிடம் கொடுத்து அதை அப்புலவருக்கு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
சீறாப்புராணம் எழுதிய உமறுப் புலவரை ஆதரித்தவர் எனும் அளவில் மட்டுமே சீதக்காதியை அறிந்திருந்த எங்களுக்கு இப்படி பயணம் முழுக்க அவரைப் பற்றிய புதிய செய்திகளும், கதைகளும் கிடைத்துக் கொண்டே இருந்தன.
சீதக்காதியின் வசந்த மண்டபத்திற்கு அருகில் ஒரு தேவாலயம் அமைந்திருந்தது. போர்ச்சுகீசியர்களால் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகதான் கீழக்கரையில் தேவாலயம் எழுப்பப்பட்டது. அது பின்னர் டச்சுக்காரர்களாலும், ஆங்கிலேயர்களாலும், இந்தியர்களாலும் புனரமைக்கப்பட்டு இன்று காணப்படும் நிலையை அடைந்திருக்கிறது. கடற்கரையில் அருகருகே அமைந்திருக்கும், சிதைந்த வசந்த மண்டபமும் நல்ல நிலையில் உள்ள தேவாலயமும், கடலின் மீதிருந்த மரைக்காயர்களின் அதிகாரம், போர்ச்சுகீசியர்களின் கைகளுக்கு சென்ற வரலாற்றை சொல்லும் குறியீடு என்றே சொல்லத் தோன்றுகிறது.
கீழக்கரையில் இன்னும் வேறு சில இடங்களுக்கு நாங்கள் சென்றாலும், அனைவரின் மனதிலும் புகைப்படம் போல பதிந்திருப்பது, 17-ம் நூற்றாண்டில் சீதக்காதியால் அமைப்பட்ட குத்பா பள்ளிவாசல்.
முழுக்கவே, திராவிட கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பள்ளிவாசல் உருவானது குறித்து ஒரு சுவாரசியமான கதை சொல்லப்படுகிறது: இராமேஸ்வரம் கோவிலை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிழவன் சேதுபதி, அதில் மிஞ்சிய கற்களை தனது அமைச்சரும் நண்பருமான சீதக்காதியிடம் கொடுத்து கீழக்கரையில் ஒரு மஸ்ஜித் கட்டச் சொன்னார். இக்கதையை மறுக்கும் அவ்வூர் மக்கள் சீதக்காதியின் சொந்த முயற்சியில்தான் இப்பள்ளிவாசல் எழுப்பப்பட்டது என்கிறார்கள். இப்பள்ளியின் வளாகத்தில்தான் சீதக்காதியும், அவரது ஆன்மீக குருவாக விளங்கிய அறிஞர் ஸதக்கத்துல்லா அப்பா அவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒரு திறந்தவெளி வரலாற்று பெட்டகமாக உள்ள கீழக்கரையில் நாங்கள் கண்டதும், பார்த்து வியந்ததும் ஏராளம்.
வெய்யிலில் சுற்றுவதால் ஏற்படும் களைப்பை தீர்த்துக் கொள்ள, எங்களில் சிலர் கூட்டத்தில் இருந்து அவ்வவப்போது நகர்ந்து, ’கமுதி பால்’ கடையில் ஜில்லென்று லஸ்ஸியும், பால் சர்பத்தும் குடித்தோம். இவற்றின் சுவை நாக்கில் இருந்து நீங்கும் முன்னரே, எங்களுக்கு மதிய உணவாக பட்டைச் சோறு வழங்கப்பட்டது.
ஒரு வகையில் இதனை கீழக்கரை விருந்து என்றே சொல்ல வேண்டும். பனை ஓலையில் சாதம், கறி, தால்ச்சா, தேங்காய் பால் ரசம் ஆகியவை வழங்கப்பட்டன. வயிறு நிரம்பியதும், மெல்ல எழுந்து எங்களது வாகனங்களுக்கு சென்று அமர்ந்தோம். கீழக்கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான மத்ரஸாவிற்கு அடுத்ததாக அழைத்துச் சென்றார்கள்.
பல்வேறு அறபுத் தமிழ் நூல்கள் அந்த மத்ரஸாவில் சேமிக்கப்பட்டிருப்பதோடு, அவற்றை தொழிற்நுட்பத்தின் உதவியோடு ஆவணப்படுத்தும் பணியிலும் அங்கிருப்பவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அங்கிருந்து புறப்பட்டு, ஏர்வாடி தர்ஹாவிற்கு செல்லும் வழியெல்லாம் ஆசிர் அண்ணனும், பேராசிரியர் சாஹூல் ஹமீதும் மதரஸாவில் வழங்கப்படும் கல்வி முறைக் குறித்து எங்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார்கள்.
தமிழக – கேரள மக்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஏர்வாடி தர்ஹாவில் எங்களால் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை. சீக்கிரமே அவரரவர் ஊர்களுக்கு செல்ல ரயிலையும், பேருந்தையும் பிடிக்க வேண்டும். எனினும், ஆன்மீக காரணத்திற்காக மட்டுமின்றி வரலாற்று ரீதியாகவும் ஏர்வாடி முக்கியமானது என்பதை இப்பயணம் உணர்த்தியது.
ஏனெனில், இத்தர்ஹாவில் அடங்கியிருக்கும் செய்யது இப்ராஹிம் எனும் இறையடியார் இஸ்லாத்தை பரப்புவதற்காக இன்றைய சவுதி அரேபியாவில் இருந்து தமிழகத்திற்கு 12-ம் நூற்றாண்டில் வருகை தந்தார். மதத்தை போதிக்கும் போதகராக மட்டுமல்லாது, ஏர்வாடியை சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்யும் சிறு அரசனாகவும் அவர் இருந்தார்.
தனது இறையாண்மையை இது பாதிக்கிறது என்பதினால், செய்யது இப்ராகிம் பாதுஷாவுடன் போரிட்டான் அரசன் விக்ரம பாண்டியன். போரில் இப்ராகிம் பாதுஷா மரணித்தாலும், இன்றும் அவர் போற்றுதலுக்குரியவராக திகழ்கிறார். மாலிக் கபூர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பாகவே இங்கு ஒரு இஸ்லாமியர் மன்னராக இருந்தார் என்பது எனக்கு முற்றிலும் புதிய தகவல். இது குறித்து எத்தகைய ஆய்வுகள் வெளியாகியுள்ளன என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.
ஏர்வாடி தர்ஹாவில் இருந்து வெளியேறியதும், வண்டி வேகமாக இராமநாதபுரம் நோக்கி சென்றது. இடையில் தேநீர் பருகுவதற்கும், பலகாரம் வாங்குவதற்கும் மட்டும் நிறுத்தினார்கள். ஏற்பாட்டாளர்கள் ‘தொதல்’ என அழைப்படும் கருப்பட்டி அல்வாவினை அன்பளிப்பாக எங்கள் அனைவருக்கும் வழங்கினார்கள். இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, பயணவாசிகள் விடை பெற்றுக் கொண்டோம். வெறும் இரண்டு தினங்களில் இத்தனைப் புதிய மனிதர்களையும், அனுபவங்களையும் பெற்றிருப்பதும் இன்னமும் பிரமிப்பைத் தருவதாகவே இருக்கிறது.