24/08/2021
இஸ்லாமிய நாடுகள் : புரியாத கேள்விகளும், புரிந்த ஆச்சரியங்களும்!
பொதுவாக இஸ்லாமியர்களில் அநேகமாக மக்கள் உண்ர்ச்சிப் பூர்வமாகவே சிந்துத்து பழக்கப்பட்டுப் போய் விட்டார்கள் என்பது ஒரு வருத்தமான செய்தி என்றாலும் அது தான் உண்மையும் கூட!. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஒருவரோ அல்லது ஒரு நாடோ வெளிப்படையாக எதிர்த்து விட்டால் அவர்கள் இஸ்லாமிய மக்கள் உள்ளத்தில் கதா நாயகர்களாக வலம் வருவது மிக எளிதாகி விடுகின்றது. அவர்களின் பின்னனி என்ன? என்ன காரணத்தால் எதிர்க்கிறார்கள் என்பதையெல்லாம் பார்ப்பது கிடையாது.
ஈராக்:
ஈராக், சதாம் ஹுசைனால் ஆளப்பட்ட பொழுது, ஈரான் - ஈராக் சண்டையின் பொழுது சௌதி அரேபியா, குவைத் மற்றும் அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகளும் சதாமுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தது என்பது வரலாற்றில் இருந்து மறைக்க முடியாது. அச்சமயத்தில், ஈராக்கிற்கு முழு பொருளாதாரத்தைக் கொடுத்தது சௌதியும் குவைத்தும் தான். சௌதி முழுக்க முழுக்க இலவச உதவியாகத் தான் செய்தது. அதற்கு பிரதி உபகாரத்தை எதிர் பார்க்கவில்லை. இஸ்லாமிய எதிரிகளான ஷியா மதத்தவரை ஒடுக்க வேண்டும் எனபதே அதன் குறிக்கோளாக இருந்தது.
ஆனால், குவைத் அதனுடைய உதவிக்குப் பகரமாக குவைத்தின் எல்லையோரமாக உள்ள ஈராக்கின் எண்ணெய் கிணறுகளில் குறிப்பிட்ட அளவு எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதவி செய்தது. அதில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதற்கு கூடுதலாக எண்ணெய் எடுப்பதாக அப்பொழுதைய ஈராக்கின் வெளியுறவுத் துறை அமைச்சர் தாரிக் அஜீஸ், (இவர் ஒரு ஈராக்கிய கிருஸ்துவர்) சதாம் ஹுசைனிடத்தில் தெரிவுக்கவே வந்தது பிரட்சினை. அதைப் பற்றிக் கேட்பதற்காக தாரிக் அஜீஸை, சதாம் குவைத்திற்கு அனுப்பினார். தாரிக் அஜீஸை குவைத் கேவலப்படுத்தி அனுப்பியது. தாரிக் அஜீஸ் நன்றாக சதாமைத் தூண்டி விட்டார். வெடித்தது போர்.
சௌதி தலையிட்டு பிரட்சினையை தீர்க்கலாம் என எவ்வளவோ சதாமை சமாதானம் செய்ய முயற்சித்தும். கேட்காமல் சதாமின் படை குவைத்திற்குள் புகுந்தது. இஸ்லாமிய போர் ஒழுக்கங்களை சிறிதும் பின்பற்றாமல் குவைத்திலிருந்த இஸ்லாமியப் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டது. 1992ல் அந்த மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டனர். அதாவது இஸ்லாமியர்கள் இஸ்லாமிய ஹீரோவாகக் கருதப்படும் சதாமால் அகதிகளாக்கப்பட்டனர். அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த தவறுக்கு அப்பாவி இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர், கற்பை இழந்தனர். அகதிகளாக சௌதி அரேபியாவின் அல் கோபர் மற்றும் தம்மாம் வீதிகளின் பிச்சை எடுத்தனர். பசிக் கொடுமையின் காரணமாக சில பெண்கள்....... அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இந்த இழி நிலைக்குத் தள்ளிய இஸ்லாமிய ஹீரோ தான் சதாம் ஹுசைன் என்பதை குவைத்தின் வீதிகளும் சௌதி அரேபியாவில் 1992 களில் அந்த குவைத் மக்களின் துன்பத்தை நேரில் கண்டவர்களும் சாட்சி சொல்வார்கள்.
இத்தோடு நிறுத்தவில்லை சதாம், சௌதி அரேபியாவின் கஃப்ஜி என்கிற நகருக்குள்ளும் தனது படையைப் புகுத்தினார். என்ன ஆயிற்று
யார் தான் சம்மபதிப்பார்கள் தனது நாட்டை வேறு ஒருவன் பிடிப்பதற்கு?!.
அடி வாங்கினார்கள் அப்பாவி மக்கள் ஈராக்கில். இதற்கெல்லாம் காரணம் யார்?
இஸ்லாமிய நாடுகளுக்குள் பேச்சு வார்த்தையை நடத்தில் அழகான முறையில் முடிக்க வேண்டிய விசயத்தை, தேவையின்றி சகோதர யுத்தத்திற்கு வழி வகுத்தது யார்?!. சதாமில்லையா!
தானும் தூக்கு மேடைக்குச் சென்று. தனது குடும்பத்தையும் அழித்துக் கொண்டதற்கு காரணம் யார்?!.
இன்றைக்கு இஸ்லாமிய நாட்டை ஷியா மதத்தவர்களிடத்தில் இழப்பதற்குக் காரணம் யார்?
எல்லாம் சதாம் ஹுசைன். இதை மறைக்க அவர் அன்றைக்கு அவர் நடத்திய நாடகம் தான் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் நடத்திய ஏவுகனைத் தாக்குதல்!.
உண்மையிலேயே அது இஸ்லாமிய உணர்வுடன் நடத்தப்பட்ட தாக்குதலா?. ஏன் அதற்கு முன் டெல் அவில் நகரத்தை சதாமின் ஏவுகனைகள் தாக்கவில்லை. அதற்கு முன், ஃபாலஸ்தீனப் பிரட்சினை என்பது ஒன்று இல்லாமல் இருந்ததா என்ன?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக வாழுகிற காலத்தில் சதாம் வெளிப்படையாகவே இஸ்லாமிய கோட்பாடுகளை மதிக்கக் கூடியவராக இருந்தாரா என்ன?!. கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றக் கூடியவராகத் தானே வாழ்ந்தார். தனது கடைசிக் காலத்தில் சிறைச் சாலை வாழ்கையின் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர் வழியைக் காட்டியது அவனது கருணை.
எனவே, சௌதி அரேபியா சுமூகமாக பிரட்சினையைத் தீர்க்க முயற்சித்தது. ஆனால், இஸ்லாமியர்களின் பேச்சை விட, சதாமின் கடைசிக் காலத்தில் அவரைக் காட்டிக் கொடுத்த அவரது வெளியுறவுத் துறை அமைச்சரும் கிருஸ்துவருமான தாரிக் அஜீசின் பேச்சைக் கேட்டார். அதனுடைய விளைவு குவைத்தில் இஸ்லாமியப் பெண்களின் கற்பு, சொத்து எல்லாம் பறி போனது அகதிகளாக்கப் பட்டனர். அதற்கான தண்டனையை சதாமும் ஈராக்கும் பெற்றது.
லிபியா:
லிபியாவின் கடாஃபியும் இஸ்லாமிய ஹீரோவாகப் பார்க்கப்பட்டவர்களில் ஒருவர். தமிழகத்தில் கூட சதாமின் பெயர் சூட்டல் போன்று கடாபியுன் பெயர் சூட்டலும் ஒரு காலக் கட்டத்தில் பெருமையாகக் கருதப்பட்டது. காரணம், அவருடைய அமெரிக்க எதிர்ப்பு. சௌதி அரேபியாவை அந்த மனிதர் பல் வேறு தருணங்களில் கேவலப்படுத்தியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே!. அதை சரி கண்டவர்களும் சமுதாயத்தில் அதிகமதிகம்.
என்ன ஆயிற்று?!. காடாபி தானே ஒரு கிரீன் புக்(பச்சைப் புத்தகம்) என்பதை உருவாக்கி, இது தான் இனி மேல் இஸ்லாமியச் சட்டம் எனக் கூறி ஷரீயத் சட்டங்களை குப்பைக்கு அனுப்ப முற்பட்டார். திரு மறைக் குரானின் சில வசனங்கள் வாழ்கைக்கு ஒத்து வராது மாற்றம் கொண்டு வர வேண்டும் என வெளிப்படை உளறினார். அல்லாஹ் கேவலத்தைக் கொடுத்தான். இவரும் ஒரு இஸ்லாமிய ஹீரோ!
எகிப்து:
இந்த நாட்டில் கிலாபத் பேசும் கிறுக்கர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். இஹ்வானுல் முஸ்லீமீனின் முர்சி ஆட்சிக்கு வந்தவுடன் என்ன நடந்தது, அவர் தனது வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்பி இஸ்ரேலின் சைமன் பெரோஸைச் சந்திக்கச் செய்தார். அந்தச் சந்திப்பின் பொழுது, ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார். அதில், இஸ்ரேல் எகிப்தின் நண்பர்கள் என்று கூறி புலகாங்கிதம் அடைந்தார். இஸ்ரேலிய உறவைப் புதுப்பிக்கப் போவதாகக் கூறினார். இன்னும் சொல்லப் போனால், ஒரு தொலைக் காட்சிக்கான ஊடகப் பேட்டியில், எங்களுக்கு மேற்கு உலகமும், இஸ்ரேலும் நண்பர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், சலஃபுகள் தான் பிரட்சினை எனக் கூறினார் என்பதை சாட்சியங்களோடு நிரூபிக்க முடியும். இவர்கள் தான் கிலாபத் செய்து கிழிக்கப் போகிறவர்கள்.
கத்தார்:
எகிப்தின் இஹ்வானுல் முஸ்லீமின்களின் மத குரு யூசுஃப் கர்ளாவியின் அழகான(?) அறிவுரையின் கீழ் இயங்குவது தான் கத்தார். என்ன நடந்தது? அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அஹமத் நிஜாதோடு கை குலுக்கிய மறு மாதமே கத்தார் ஈரானோடு கை குலுக்கியதே ஏன்?, இவ்வளவு நாள் இல்லாத அவசியம் என்ன வந்தது?!. ஒட்டு மொத்த அரபு லீகும் இன்றைக்கு கத்தாரை ஒதுக்கி வைத்திருக்கிறதே! இதற்கு அவர்களின் ஷியா மதத்தவர்களோடான உறவு தானே காரணம். இஸ்லாமியர்களைப் பூண்டோடு அழிக்க வேண்டும் என உள்ளார்ந்த கொள்கையுடையவன் ஷியா. அவனோடு இவர்களுக்கு என்ன உறவு.
கிலாபத் பேசும் கிறுக்கர்களின் மத குருவின் கீழ் ஆட்சி செய்யும் இந்த கத்தார் காசாவில் சென்று போரில் குதிக்க வேண்டியது தானே!
ஆஃப்கான்:
தாலிபான்கள் கொள்கைக்காகப் போராடியவர்கள். அவர்களாகச் செயல்பட்டது வரை அவர்களை யாரும் உலகப் பயங்கரவாதிகளாகப் பார்த்தது கிடையாது. என்னவாயிற்று?! உலக இஸ்லாமிய கிலாபத் கிறுக்கர்களின் ஹீரோ ஒசாமா பின் லேடன், அமெரிக்காவின் கைக் கூலி உள்ளே நுழைந்தவுடன் தாலிபான்கள் உலகப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டார்கள். அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி இலவச உதவிகளைச் செய்து ஹீரோவான ஒசாமா பின் லேடனால், அந்த நாட்டின் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இஸ்லாமியப் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது. ஒழுக்கமான தாலிபான் போராளிகள் உலகத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படக் காரணமானவர் இந்த ஒசாம பின்லேடன் இல்லையா?!. ஆனால், அவரது மைத்துனரையும் மூத்த சகோதரரைக் கொண்டு ஜார்ஜ் புஷ்ஷின் அபுஷ்ட்ரோ ஆயில் கம்பெனியோடு வியாபரம் செய்து கொண்டிருந்தது என்பதெல்லாம் உலகம் அறியாத விடயம். இன்றைக்கு என்ன நிலைமை இஸ்லாமிய நாடு ஷியா மதத்தவரால் ஆளப்படுகிறது.
கிலாபத்:
ஒரு சந்தேகம். கிலாபத் பேசும் கிறுக்கர்கள். தங்களை ஏன் பைத்துல் முகத்திசை மீட்க ஆட்படுத்திக் கொள்ளவில்லை. இஸ்லாமிய நாடுகளை குறை சொல்லும் இந்தப் போலிக் கும்பல் ஏன் பழைய கிப்லாவை மீட்க படை திரட்டவில்லை. இன்றைக்கு எம் பெண்களும் பிள்ளைகளும் விலங்கினங்களைப் போன்று கொல்லப்படுகிறார்களே!, இந்தக் கிலாபத் கிறுக்கர்கள் என்ன ஆனார்கள்?!
அசிசை ஆதரிக்கிற கிலாபத்காரர்கள், அதாவது ஒமர் ஷீசானி போன்றவர்கள் ஈராக்கில் காணப்பட்டார்களே, அவர்கள் ஏன் எம் ஃபாலஸ்தீனத்தில் காணப்படவில்லை. அபூபக்கர் பாக்தாதிக்கு பாலஸ்தீன பச்சிளம் மழலையின் அழு குரல்கள் கேட்கவில்லையா. அமெரிக்க போர் விமானங்களை ஈராக்கின் இரானுவ கிடங்கிலிருந்து கைப்பற்றப்பட்டு விட்டதாகச் சொன்னார்களே!, 40,000 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அடுக்கடுக்காக அடுக்கி தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் காண்பிக்கப்பட்டதே, எங்கே எம் பாலஸ்தீன மழலைகளைக் காக்க வரவில்லை?
எம் இஸ்லாமியப் பிஞ்சுகளை காக்க மறுக்கிறவர்கள், அதைப் பற்றிப் பேசவே இல்லாமல் வாய் மூடிக் கிடக்கிறவர்கள் தான் இஸ்லாமிய இன்றைய கலீஃபாக்கள்! கிலாபத்காரர்கள்!
சௌதி அரேபியா:
யூதர்களுக்கு மாறு செய்வதிலும், அவர்களை எதிர்ப்பவர்களை அங்கீகாரம் செய்வதிலும் சௌதி அரேபியா அதற்கு நிகர் அது தான் என்றே இருந்திருக்கிறது.
இடி அமீன்: காலம் சென்ற உகாண்டாவின் அதிபர் இடி அமீன் (அல்லாஹ் அருள் புரிவானாக!) யூதர்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஆகையினால், உலக ஊடக விபச்சாரகர்களால் மிகக் கொடூரமான மனிதராகச் சித்தரிக்கப்பட்டவர். ஆனால், அவர் யார் என்பதை சௌதி அரேபியா மட்டுமே அறிந்து வைத்திருந்தது. அவருக்கு இராஜ தஞ்சம் அளித்து கௌரவித்து அவரது மரனமும் சௌதி அரேபியாவிலேயே முடிந்து போனது உலகறிந்த உண்மை.
இன்றைக்கு தனது நாட்டின் 50 ரியால் நோட்டில் பைத்துல் முகத்திஸ் எங்களின் சொத்து என்பதைப் பறை சாற்றும் வண்ணமாக அச்சடித்துக் கொண்டு இருக்கிறது. அதை மீட்பதற்காக....
காலம் சென்ற ஃபாலஸ்தீனத்தின் தலைமை முஃப்தி ஹுசைன் அல் அமீனியுடன் கை கோர்த்து செயல்பட்டது. அவருக்குத் தேவையான பொருளாதராத்தை வாரி வழங்கியது. அதற்காக ஜெர்மனியின் ஹிட்லருக்கு மானசீகமான ஆதரவையும் அளித்தது. ஹிட்லர் உலகப் போரில் வென்றிருந்தால், ஃபாலஸ்தீனத்தை முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என்கிற முஃப்தி ஹுசைனியின் ஒப்பந்தத்திற்கு பின்புலமாகச் சௌதி செயல்பட்டது.
அதற்கு பின், யாசர் அராஃபத்தை பாலஸ்தீன அதிபராக ஏற்றுக் கொண்ட முதல் நாடு சௌதி அரேபியா என்பதை வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை. இன்று வரை இஸ்ரேலை ஒரு நாடாகவே சௌதி அங்கீகாரம் செய்யவில்லை என்பது அதன் தொடர்ச்சி.அந்த மக்கள் அகதிகளாக வந்த பொழுது அவர்களுக்கு தஞ்சம் கொடுத்து, சௌதிகளுக்கு நிகரான குடியுரிமையை வழங்கியது.
அது மட்டுமல்லாமல், எத்துனையோ பேச்சு வார்த்தைகளை இன்று வரை நடத்திக் கொண்டு தான் உள்ளது. ஹமாசும் பிரிவும் ஃபத்தாஹ் பிரிவும் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்ட பொழுது இடையிட்டு அவர்களை அழைத்து ஒற்றுமையை ஏற்படுத்தி அனுப்பியது. ஆனால், அந்த ஒற்றுமையை அவர்கள் பேனவில்லை என்பது வேதணையான விடயம்.
இன்றைக்கு 56.5 மில்லியன் டாலர்களை ஃபாலஸ்தீன மக்களுக்காகக் கொடுத்துள்ளது. இந்தப் பணம் போனதற்குப் பின் தான் ஹமாசின் தாக்குதல் உக்கிரம் அடைந்திருக்கிறது என்பதை விபரமுள்ளவர்கள் அறிவார்கள்.
இது மட்டுமா... இலட்சக் கணக்கான சோமாலியர்கள், ஆஃப்ரிக்கர்கள் மற்றும் பர்மியர்கள் என இன்றைக்கு சௌதி அரேபியா தஞ்சம் கொடுத்து குடியுரிமைக்கு நிகரான உரிமை கொடுத்து வாழ வைக்கிறது. பல் வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆஃப்ரிக்க நாடுகளில் ஏராளமான சேவைகளைச் செய்து வருகிறது.
செர்பியா - போஸ்னியா ஹெர்சகோவினா சண்டையின் பொழுது, அங்குள்ள முஸ்லீம்களை அழைத்து வந்து குடியுரிமைக்கு நிகரான உரிமையைக் கொடுத்து வாழ வைத்தது. அது மட்டுமல்லாமல், நிர்கதியாக நின்ற அந்தப் பெண்களை மணந்து கொள்ள சௌதி இளைஞர்களை ஆர்வப்படுத்தி அவர்களுக்கு சன்மானாமாக 15,000 சௌதி ரியால்களையும் கொடுத்தது சௌதி அரசாங்கம்.
இன்னும் எத்துனையோ விடயங்களை மறைமுகமாக செய்து கொண்டு உள்ளது. அல்லாஹ் அவர்களின் குறைகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளப் போதுமானவன்.
போரில் குதிக்க வேண்டுமா?!
சௌதி அரேபியா உலக நாடுகளில் எங்கு முஸ்லீம்கள் தாக்கப்பட்டாலும் போரில் குதிக்க வேண்டும். அமெரிக்காவைத் தட்ட வேண்டும் என கிலாபத் கிறுக்கர்கள் நினைக்கிறார்கள். அது உலக முஸ்லீம்கள் தங்களைத் தாங்களே தற்கொலை செய்து கொல்வதற்குச் சமம் என்பதை விளங்காதது வரை இந்த வெட்டிப் பேச்சுகளுக்கு குறைவிருக்காது.
சௌதி அரேபியாவும் ஷியாவின் ஆட்சிக்குக் கீழ் செல்ல வேண்டுமென்று விரும்புவோர்கள் மட்டுமே இது போன்ற சிந்தனைகளைப் பேச்சை மேற் கொள்வார்கள். ஷியாக்களிடம் ஆட்சியைப் பிடிங்கிக் கொடுக்கிற பணி தான் இன்றைய இஸ்லாமிய உலகின் கிலாபத் கிறுக்கர்களால் விளைந்த நன்மை.
சௌதி அரேபியா, மிரட்டலாம், எதிர்க்கலாம், போரில் கூட குதிக்கலாம். ஆஃப்கானிய, ஈராக்கிய ஷியா ஆட்சி சௌதியிலும் உருவாகலாம். ஏகத்துவ ஆலயத்தில் அநாச்சாரங்கள் உஸ்மானியர்கள் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தைப் போன்று நிகழலாம். நான்கு முசல்லாக்கள் போட்டு நான்கு ஜமா அத் தொழுகை மீண்டும் நடக்கலாம். இதற்கெல்லாம் சௌதி அரேபியா தயாரில்லை. எந்த ஒரு ஏகத்துவ இஸ்லாமியனும் தயாரில்லை. கிலாஃபத் கிறுக்கர்களுக்கு வேண்டுமானால் இஸ்லாமும் ஷியாவும் ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் உண்மை இஸ்லாமியன் ஷியாக்களின் கைகளில் இஸ்லாமிய நாடுகள் வீழ்வதை விரும்ப மாட்டார்கள்.
ஆயிலை வைத்து மிரட்ட வேண்டுமா?
ஆயிலை வைத்து மிரட்ட வேண்டும் என்பது சிலரின் ஆதங்கமாக உள்ளது. ஆயிலை வைத்து மிரட்டலாம் என்றால், முதலில் அது மார்க்க நிலைபாட்டிற்கு மாறானது. அல்லாஹ் கொடுத்திருக்கிற அருட் கொடையை மக்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பது என்பது தவறானது என்பது தான் ஓர் ஏகத்துவவாதியின் நிலைபாடாக இருக்க வேண்டும். காவேரி நீரை கர்நாடாக தமிழகத்திற்கு தர மறுப்பது தவறெனில், சௌதி அரேபியா உலகத்திற்கு பெட்ரோலை கொடுக்காமல் பிளாக் மெயில் செய்யலாம் என்பது எந்த வகையில் நியாயம்.
அடுத்ததாக, அவர்கள் ஆயிலை நிறுத்தினால் உலகம் எல்லாவற்றையும் நிறுத்தும். பொருளாதாரத் தடை பாயும். அந்த மக்கள் ஒன்றும் கிடைக்காமல் மரணிக்க வேண்டும். இது தானே நடக்கும். இந்த அரபு நாடுகளை வைத்து தங்களது குடும்பங்களை நிர்வகித்துக் கொண்டு இருக்கிற இலட்சோப இலட்ச இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்கை தள்ளாடும். இந்த நாட்டிலிருந்து தங்களது ஜீவாதாரங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிற ஆஃபிரிக்க நாடுகள் அழிந்து போகும். ஏன் சிரியா, ஈராக், பாலஸ்தீன் ஆகிய நாடுகளின் வாழுகிற இஸ்லாமியர்கள் இன்னும் அதிகமாக மடிவார்கள். இதை எந்த ஒர் இஸ்லாமியனும் கிஞ்சிற்றும் விரும்ப மாட்டான்.
உணர்ச்சிகளுக்குக் கட்டுப்படாமல், நீண்ட நெடிய பார்வையோடு செயலாற்றிய அண்ணாலார்(ஸல்) அவர்களின் பார்வையில் செயல்படுவதே சாலச் சிறந்தது.
அல்லாஹ் நமக்கு நீண்ட நுண்ணிய நோக்கங்களையும் பார்வையையும் கொடுத்து சிறந்த வெற்றியையும் கொடுக்கப் போதுமானவன்!
இப்படிக்கு
அபுதாஹிர். மா.கெள.மா