
20/09/2024
#இலங்கையின்_அண்மைக்கால_தொல்லியல்_ஆய்வுகள்
#வேலணை, சாட்டியில் பெருங்கற்காலப் பண்பாடு
#அண்மைக்காலத்தில் வடஇலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய தொல்லியல் மையங்களில் தீவகத்தில் உள்ள சாட்டியும் ஒன்றாகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் வேலணைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இலங்கையின் வரலாற்றுப் பழைமை வாய்ந்த துறைமுகங்களைக் கொண்ட கிராமம் என்ற வகையில்
வேலணை, சாட்டியில் பெருங்கற்காலப் பண்பாடு
இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.
அண்மைக்காலத்தில் வடஇலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய தொல்லியல் மையங்களில் தீவகத்தில் உள்ள சாட்டியும் ஒன்றாகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் வேலணைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இலங்கையின் வரலாற்றுப் பழைமை வாய்ந்த துறைமுகங்களைக் கொண்ட கிராமம் என்ற வகையில் சாட்டிக்குத் தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு.
இதன் அமைவிடம் புவிச் சரிதவியல் அடிப்படையில் தமிழகத்திற்கு மிகக் கிட்டிய தூரத்தில் அமைந்திருப்பதால் இவ்விடம் பண்டுதொட்டு தென்னிந்தியாவுடனும், தென்னிலங்கையுடனும் யாழ்ப்பாணக் குடாநாடு ஏற்படுத்திக் கொண்ட கடல்வழித் தொடர்பிற்குக் குறுக்கு நிலமாகவும், தமிழகப் பண்பாட்டை முதலில் உள்வாங்கிய தொடக்க வாயிலாகவும் திகழ்ந்ததெனக் கூறலாம். இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், ஐரோப்பியர் கால ஆவணங்களிலும் பல சான்றுகள் காணப்படுகின்றன. அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இக்கிராமத்தில் பிற தேவைக்காக மண் அகழப்பட்ட போது எதிர்பாராமல் கிடைத்த தொல்லியற் சான்றுகளும், 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் மற்றும் பேராசிரியர் பொ. இரகுபதி ஆகியோர் இங்கு மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வில் சேகரித்த தொல்லியற் சின்னங்களும், தீவகம் பற்றி இலக்கியக் கலாநிதி வி. சிவசாமி எழுதிய நூலும் ஆய்வுக் கட்டுரைகளும் இவ்விடத்தின் பழைமையை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
சாட்டிக் கிராமத்தில் பரவலாகக் காணப்படும் தொல்லியல் எச்சங்கள் இங்கு பண்டுதொட்டு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் இம்மக்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், எப்போது வந்தார்கள், இவர்களுக்கும் குடாநாட்டின் ஏனைய இடங்களில் வாழ்ந்த மக்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன? என்பன முக்கிய கேள்விகளாக உள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பகத் தன்மையுடைய தொல்லியற் சான்றுகளின் அடிப்படையில் இலங்கைக்குரிய பூர்வீகக் குடிகள் தென்னிந்தியாவின் தென்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்ற கருத்து பலமாக வலுப்பெற்று வருகின்றது.
1917 – 1918 காலப் பகுதிகளில் கந்தரோடையில் தொல்லியல் மேலாய்வில் ஈடுபட்ட போல்பீரிஸ் என்பவர் அநுராதபுரத்துக்கு அடுத்த புராதன நகராக கந்தரோடையை வர்ணித்தார். 1967 இல் பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள் அகழ்வாய்வினரும், 1973 இல் விமலா பேக்லே என்பவரும் கந்தரோடையில் மேற்கொண்ட அகழ்வாய்வினை ஆதாரமாகக் கொண்டு, தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள அரிக்கமேடு, ஆதிச்சநல்லூரை ஒத்த பண்பாட்டு மக்கள் கந்தரோடையில் வாழ்ந்தார்கள் என்ற கருத்தை முதன் முதலாக முன்வைத்தனர். 1980 இல் பேராசிரியர் பொ. இரகுபதி ஆனைக்கோட்டையில் கண்டுபிடித்த பெருங்கற்கால ஈமச்சின்னமும், 1989 – 1993 காலப்பகுதியில் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் பூநகரியில் கண்டுபிடித்த இப்பண்பாட்டுச் சின்னங்களும் குடாநாட்டின் தொடக்ககால மக்கள் தென் தமிழகத்தை ஒத்த பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய திராவிட மக்கள் என்பதை உறுதிப்படுத்தின. ஆயினும் இம் மூன்று இடங்களில் கிடைத்த ஆதாரங்களை வைத்து இதையொத்த குடியிருப்புகள் சமகாலத்தில் குடாநாட்டில் பரந்தளவில் இருந்ததெனக் கூறமுடியாதிருந்தது.
ஆனால் இலங்கையில் தமிழகப் பண்பாட்டை முதலில் உள்வாங்கிக் கொள்ளும் தொடக்க வாயிலாகவும், குறுக்கு நிலமாகவும் தீவகம் அமைந்திருப்பதால் அங்கு பண்டைய காலம் தொட்டு மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற ஐதீகம் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில் இருந்து இப்பிரதேசத்தில் வாழ்ந்த தொடக்ககால மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய திராவிடர் என்பது உறுதியாகத் தெரியவந்துள்ளது. இலங்கையில் வாழ்ந்த இப்பண்பாட்டு மக்கள் பற்றி கலாநிதிப் பட்டத்திற்காக விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் ‘யாழ். மாவட்டத்தின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளும், ஆதிக்குடிகளும்’ என்ற கட்டுரையில் தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கே தனித்துவமானதாகக் கருதப்படும் மெருகூட்டப்பட்ட கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள் காணப்படும் இடங்களில் ஒன்றாகச் சாட்டிக் கிராமத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆனைக்கோட்டை, காரைநகர் ஆகிய இடங்களில் அகழ்வாய்வு மூலம் பெருங்கற்கால மக்களது எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்த பேராசிரியர் பொ. இரகுபதி தனது தொல்லியல் மேலாய்வின் போது சாட்டிக் கிராமத்தில் இருந்து பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய புராதன கறுப்புச் – சிவப்பு நிற மட்பாண்டங்களைச் சேகரித்ததாக ‘யாழ்ப்பாணத்தின் புராதன குடியேற்றங்கள்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல் ஆய்வுக் குழுவினர் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு மேற்கொண்ட அகழ்வாய்யின் போது கண்டுபிடித்த இப்பண்பாட்டிற்குரிய பலவகைப்பட்ட சான்றுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
இக்குடியிருப்புகள் பெரும்பாலும் கடற்கரையை அண்டிய மணற் பாங்கான இடங்களிலேயே முதலில் ஏற்பட்டிருந்ததனைக் காணமுடிகின்றது. இதற்கு அதிக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாது அழிக்கக்கூடிய பற்றைக் காடுகள், இலகுவாக நீரைப் பெறக்கூடிய மணற்பாங்கான தன்மை என்பனவே காரணம் எனலாம். பொதுவாக வைரமான மண்ணுள்ள இடங்களில் நீரைப் பெறுவதற்கு வலுவான தொழில்நுட்பம் தேவை. ஆனால் அவ்வாறானதொரு தொழில்நுட்பம் அன்றைய காலத்தில் இலங்கையில் வளரவில்லை.
தென்னிலங்கையில் இயற்கையாகத் தோன்றிய ஆறுகள், குளங்கள், நீரைப் பெறுவதற்குச் சாதகமாக இருந்தமையால் அவ்விடங்களை அண்டிக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். ஆனால் யாழ்ப்பாணத்தில் அந்த வாய்ப்புகள் இல்லை. இதனால் தான் தொழில்நுட்பத்துடன் இலகுவாக நீரைப் பெறக்கூடிய மணற்பாங்கான இடங்களில் அக்கால மக்கள் குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். மற்றும் இலகுவாக கடல் உணவைப் பெறக்கூடிய ஆழம் குறைந்த பரவைக்கடல், தரைவழிப் போக்குவரத்திற்கு சாதகமான தரைத்தோற்றம் என்பன இப்பிரதேசத்தில் குடியேற சாதகமான அம்சங்களாகக் காணப்பட்டன.
ஈமச்சின்னங்களின் வடிவமைப்பு
வரலாற்று உதயகாலம் என்று அழைக்கப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டில் வாழ்ந்த திராவிட மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காகப் பெரிய கற்களைப் பயன்படுத்திப் பல்வேறு வடிவங்களில் சவ அடக்கங்களை வடிவமைத்தனர். இவை ஈமச்சின்னங்கள் என்று அழைக்கப்பட்டன. அந்தவகையில் ஈமச்சின்னங்களை ஈமத்தாழி, ஈமப்பேழை, தொப்பிக்கல், குத்துக்கல், கற்பதுக்கை, கல்வட்டம், கல்மேசை, குடைக்கல், நீளக்கிடத்தி அடக்கம் செய்தல் என அவற்றின் வடிவமைப்பைக் கொண்டு பலவாறு பிரிக்கலாம்.
சாட்டியில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுக் குழுவினர் 2004 ஆம் ஆண்டில் மேற்கொண்ட தொல்லியல் அகழ்வாய்வின் போது அங்கு ஈமச்சின்னங்களை கண்டுபிடித்தனர். அகழ்வாய்வுக்கு உட்படுத்திய இடம் சாட்டிக் கிராமத்தின் மையப் பகுதியாகவும், வரலாற்றுப் பழைமைவாய்ந்த துறைமுகம் அமைந்த இடமாகவும் காணப்படுகிறது. இங்கு 10 மீற்றர் இடைவெளியில் 30 இற்கு மேற்பட்ட ஈமச் சின்னங்கள் இருந்ததற்கான சான்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 10 இடங்கள் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அக்கால மக்களது பண்பாட்டு எச்சங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ் ஈமச் சின்னங்கள் காணப்பட்ட இடங்கள் கல்லும் மண்ணும் கலந்த நிலையில் மண் மேடுகளாகக் காணப்பட்டன. ஆனால் அவ்விடங்களை அகழ்ந்தபோது அவை ஏறத்தாழ 1 முதல் 2 அடி விட்டமும், ஏறத்தாழ 10 முதல் 12 அடி உயரமும் கொண்ட சிறிய கிணறு வடிவில் அமைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்த அம்சம் பெருங்கற்காலப் பண்பாட்டில் பின்பற்றப்பட்ட குழியடக்க ஈமச்சின்னங்களை நினைவுபடுத்துகிறது. இதன் அத்திவாரத்தின் ஒரு இடத்தில், குடை வடிவில் மிகப் பெரிய கல்லை வடிவமைத்து அதன் உட்பக்கத்தை வட்டமாகக் குடைந்து அதற்குள் இறந்தவர் உடலின் பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. பொதுவாக இந்த வடிவில் அமைந்த பெருங்கற்கால ஈமச்சின்னம் குடைக்கல் எனத் தொல்லியலாளர்களால் அழைக்கப்படுகிறது.
இவ் ஈமச்சின்னங்களின் மேற்பகுதி பெரும்பாலும் மண் அகழ்வோரின் நடவடிக்கைகளால் சிதைவடைந்திருந்தாலும் கீழ்ப்பக்க மண் படையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளும் அவற்றுடன் இணைந்திருந்த பிற பொருட்களும் இவ்விடங்களில் எல்லாம் இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் பெருங்கற்கால மற்றும் வரலாற்றுத் தொடக்க கால ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் இவ் ஈமச்சின்னங்கள் சிலவற்றின் மேலுள்ள கலாசார மண் படையில் பிற்பட்ட கால அரேபிய – சீன மட்பாண்டங்களும், ஒரு ஈமச் சின்னத்தில் கி.பி 13 – 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யாழ்ப்பாண அரசுக் கால சேது நாணயமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் கீழ்ப் பகுதியில் உள்ள பெருங்கற்கால ஈமச்சின்னத்திற்கும் அதன் மேற்பகுதியில் உள்ள கிணற்று வடிவிலான கட்டிடப் பகுதிக்கும் உள்ள தொடர்பையிட்டு அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.
பேராசிரியர் பொ. இரகுபதி இங்கு பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்த இடங்களுக்கு மேல் காலப்போக்கில் சிறிய கிணற்றுவடிவிலான கட்டடம் பிறதேவைக்காக அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறார். தமிழகத் தொல்லியல் அறிஞரான பேராசிரியர் சுப்பராயலு தமிழகத்தில் மேற்கொண்ட சில அகழ்வாய்வுகளை உதாரணம் காட்டி, சாட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இப் பிராந்தியத்திற்கேயுரிய தனித்துவமான அம்சம் எனக் கூறுகிறார். ஆயினும் சிதைவடையாத நிலையில் உள்ள ஒரு ஈமச்சின்னத்தை சாட்டியில் கண்டுபிடித்து முழுமையாக அகழ்வு செய்யும் வரை இறுதியான முடிவுக்கு வருவது பொருத்தமாகத் தெரியவில்லை. ஆயினும் இங்கு வாழ்ந்த தொடக்ககால மக்கள் பெருங்கற்கால திராவிட மக்கள் என்பதை இதுவரை சாட்டியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன என்பதில் சந்தேகமில்லை.
R.A Sabni
Archeological tourism consultant
(Northern province)