01/03/2021
வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில்
வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது. இங்கு ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை- (4 நிமிடங்கள்) மட்டும் இருந்தாலே மோட்சம் கிட்டிடும்!. அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.
லட்சுமி நரசிம்மர்
750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோவில் உள்ளது. லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் 2 திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோவில்.
பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டுமே நரசிம்மர், கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் வீற்றிருக்கிறார். சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.
விசுவாமித்திரர்
விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பிரம்மரிஷி பட்டமும் பெற்றதாக வரலாறு உள்ளது. பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்தமடைய வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்திருத்தலத்தில் தவமிருந்துள்ளார்.
கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை வதம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றின் துணையோடு, அரக்கர்களை அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார்.
ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சக்கரத்தோடு பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார்.
இம்மலையின் அருகே எதிர்திசையில் 350 அடி உயரத்தில், 406 படிக்கட்டுகள் கொண்ட, சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்தபடி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.
ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.
பில்லி, சூனியம்
பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள் பாலிக்கும் யோக நரசிம் மரையும், யோக ஆஞ்ச நேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு காஞ்சிபுரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் 3ம் நாள், பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக்குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
நோய் தீர்க்கும் மலை
காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கட மலைக்கும் இடையில் சோளிங்கர் அமைந்துள்ளது. மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் குணமாகிறது. இங்குள்ள திருகுளத்திற்கு ‘அனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம். ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர மற்ற இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள். சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும். பில்லி சூன்யத்தை விரட்டலாம்.
புதிதாக நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும், வீடு கட்ட ஆசைப்படு பவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வ தற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.
கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம். சோளிங்கரில் முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிவா வடிவம் என்கின்றனர். இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
குங்குமம்-அர்ச்சனை
இந்த ஆலயத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து குங்குமப் பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள். திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத மெய்யன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும் மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றனர்.
வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியைத் துதிப்பதால் வேண்டியதெல்லாம் பெறலாம். தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம், தானம், தவம் முதலியன செய்தால் அவன் பரம்பரை தழைத்தோங்கும். ஒரு போதும் வம்சம் அழியாது. அத்தீர்த்தக்கரையில் மரம்செடி முதலியன வைத்து வளர்த்தால் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நன்மையையும் அடைவர்.
தினமும் காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரைக்கும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தான் கோவில் நடை திறந்திருக்கும். முதலில் விசுவரூபம், நித்யபடி, முதல்காலம், 2&ம் காலம், அரவணை ஆகிய முறைகளில் பூஜைகள் நடக்கிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவ பூஜைகள் நடக்கிறது.
ஸ்ரீராமரின் சங்கு-சக்கரத்தால் அரக்கர்களை அழித்த அனுமன்
தவ முனிவர்களான அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர் என்னும் சப்தரிஷிகளும் இத்தலத்தில் தவமிருந்து பெருமாளின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆசைப்பட்டனர். அதேசமயம் அனுமனும், ஸ்ரீராம அவதாரம் முடிந்து ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு செல்லும் பொழுது தானும் உடன்வருவதாக கூறியதால் அவரும் இந்த தலத்தில் வந்து காத்திருந்தார்.
இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த சப்த ரிஷிகளுக்கு காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைக்கண்டு அனுமன் ஸ்ரீராமனிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமபிரான் தன்னுடைய சங்கு சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து இதைக் கொண்டு அரக்கர்களை அழிக்க உத்தரவிட்டார். அனுமனும் அப்படியே செய்தார். காலன், கேயன் என்ற அரக்கர்கள் மாண்டனர்.
WELCOME TO SOUTH INDIA
www.ashtalakshmitravels.in
whats app:+91 8825666165