05/10/2022
உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் கோயில் அமைந்த கம்போடியாவில்,சியம் ரீப் நகரில் உலகத் திருக்குறள் மாநாடு வெகு சிறப்பாக நடைப்பெற்றது.செப்டம்பர் 29,30 (2022) ஆகிய இரு தினங்களில்
நடந்த இவ்விழாவில் முதல் நாள் கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைந்த அரசு வளாகத்தில்,திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டது.வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கத் தலைவர் திரு.வி.ஜி. சந்தோஷம் ஐயா,திருவள்ளுவர் சிலையை கொடையாக வழங்கி சிறப்பு செய்தார்கள்.அங்கோர் தமிழ் சங்கம்,கம்போடிய தமிழ்நாடு தொண்டு நிறுவனம்,சீனு ஞானம் பயண ஏற்பாட்டாளர்கள், பன்னாட்டு தமிழர் நடுவம் ஆகியோர் இணைந்து சிறப்புடன் இவ்விழாவை நடத்தினார்கள்.
விழாவில் புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் திருமதி.சந்திர பிரியங்கா அவர்கள் வருகைத் தந்து சிறப்பித்தார்கள்.திருக்குறள் மற்றும் இரு நாட்டின் ஒற்றுமை,வளர்ச்சி,பண்பாடு குறித்து உரையாடினார்கள். மேலும் நீதியரசர் திரு.வள்ளிநாயகம், வி.ஜி.சந்தோஷம் ஐயா,வி.ஜி.பி குழுமத்தைச் சேர்ந்த வி.ஜி.இராஜா தாஸ், நீதியின் குரல் சி.ஆர் பாஸ்கரன், மருத்துவர் ததிருத்தணிகாச்சலம்திரு.மல்லை சத்யா,ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் திரு.தமிழ் செல்வன், முனைவர் வணங்காமுடி,கவிஞர் கருமலைத் தமிழாழன்,கவிஞர் ஓசூர் மணிமேகலை,முனைவர் உலகநாயகி பழநி மற்றும் ஏராளமான முனைவர்கள்,பேராசிரியர்கள்,மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள், சான்றோர் பெருமக்கள் நிறைந்து விழா சிறப்புற நடைபெறச் செய்தார்கள்.
விழாவில் திருக்குறளை கெமர் மொழியில் வெளியிடும் முன்னோட்ட நிகழ்வும் சிறப்பாக நடைப்பெற்றது.கெமர் மொழியில் மொழி பெயர்க்க உதவிய ஆசிரியர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியாகச் செயல்படும் திரு.தங் ரூ அவர்களுக்கு மேடையில் சிறப்பு செய்யப்பட்டது.மேலும் திருக்குறள் கெமர் மொழிப் பெயர்ப்பு நூலை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சூம் செயலி மூலம் வெளியிட இருப்பதை,செம்மொழி நிறுவனத்தின் முதல் இயக்குநராக உள்ள திரு.சந்திர சேகர் அவர்கள் மாநாட்டில் இணையம் மூலம் தெரிவித்தார்.
திரு.நரேந்திர மோடி அவர்கள் புத்தகம் வெளியிட்டதும் கம்போடியா முழுவதும் உள்ள பள்ளிகளில் இலவச திருக்குறள் புத்தகங்களை வழங்க அங்கோர் தமிழ் சங்கம் திட்டமிட்டுள்ளது.இந்த அரிய முயற்சியைப் பாராட்டி திரு.சந்திர சேகர் அவர்கள் அங்கோர் தமிழ் சங்க தலைவர் திரு.சீனிவாசராவ் அவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இரண்டு நாள் நிகழ்வில் திருக்குறள் சார்ந்த கவியரங்கம்,கருத்தரங்கம்,சொல்லரங்கம் என பல சிறப்புமிக்க நிகழ்வுகள் நடந்தது.ஐந்துக்கும் மேற்ப்பட்ட புத்தக வெளியீடுகள் விழாவை மேலும் சிறப்பாக்கியது.மேலும் கல்லூரி மாணவிகள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள்.திருக்குறள் மாநாட்டு மலரும் வெளியிடப்பட்டது.
பல்வேறு தலைப்புகளில் சான்றோர் பெருமக்கள் உரை வழங்கினார்கள்.மாநாட்டு நிகழ்வில் நிறைவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ,கெமர் மொழியில் திருக்குறளை வெளியிடுவதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2 தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து நாட்டின் தாய் மொழியிலும் முதலில் திருக்குறளை மொழிப் பெயர்க்க வேண்டும்.
3 கம்போடியாவில்,அரசு அளிக்கும் நிலத்தில் இராசேந்திர சோழனுக்கு சிலை நிறுவ வேண்டும்.
4 கம்போடியாவில் சிலை அமைக்க உதவிய வி.ஜி.பி உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் திரு.சந்தோஷம் ஐயா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
5.,இந்திய,கம்போடியாவின் உறவை மேலும் வலுப்படுத்தவும்,வரலாற்று ஒற்றுமைகளை உலகிற்குத் தெரியப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6 நிறைவாக சிலை அமைக்க உதவிய கம்போடிய அரசுக்கும்,கலை மற்றும் பண்பாட்டுத் துறையைச் சேர்ந்த இயக்குநர் திரு.மோர்ன் சொப்பீப் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அனைவரும் மகிழும் வண்ணம் மாநாட்டுச் சிறப்பாக, வந்திருந்த சான்றோர்களுக்கு கம்போடிய அரசின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.கம்போடியாவின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் இயக்குநர் திரு.மோர்ன் சொப்பீப் அவர்கள் இவ்விருதுகளை வழங்கினார்.மற்றும் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.நிறைவாக மாநாடு இனிதே நிறைவடைந்தது.உணவு ஏற்பாடுகள் லோட்டஸ் தோசை கார்னர் உணவக ஊழியர்கள் மூலம் சிறப்பாக செய்யப்பட்டது.அங்கோர் தமிழ் சங்கத் தலைவர் சீனிவாசராவ்,செயலாளர் திரு.ஞானசேகரன்,துணைத் தலைவர் திரு.இரமேஷ்வரன் மற்றும் பொருளாளர் திருமதி.தாமரை சீனிவாசராவ் வந்திருந்த பெரு மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
உலகப் புகழ் மிக்க இந்த வரலாற்று நிகழ்வில்,வந்து கலந்துக் கொண்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும்,இச் செய்தியை உலகெங்கும் கொண்டு சென்றமைக்கு அங்கோர் தமிழ் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.