28/05/2016
தடை கடந்து அமெரிக்கா சென்ற இந்திய மாதுளை
மும்பை : கடந்த, 26 ஆண்டுகளுக்குப் பின், இந்தியா அனுப்பிய, 1.3 டன் மாதுளம் பழம், அமெரிக்காவில், மே 1ம் தேதி இறக்குமதியானது.
அமெரிக்கா, 1990ல், இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது. பூச்சி தாக்குதல் தொடர்பான இந்த நடவடிக்கையில், மாதுளை, திராட்சை, லிச்சி போன்ற பழங்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நவீன வேளாண் முறைகளில் உற்பத்தி செய்யப்பட்ட, பாதுகாப்பான மாம்பழங்களின் இறக்குமதிக்கு, சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கா அனுமதி அளித்தது. இதையடுத்து, மாதுளை, திராட்சை, லிச்சி ஆகியவற்றுக்கான தடையை நீக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன் விளைவாக, அமெரிக்க உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழு, மஹாராஷ்டிர மாநிலம், வாஷிக்கு வந்தது; அங்குள்ள, கதிரியக்க ஆய்வகத்தில், மாதுளம் பழங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், உடலுக்கு ஊறு விளைவிக்கும் அம்சங்கள் இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து, அவற்றின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.அதன்படி, கே.பி.எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின், 1.30 டன் ‘பக்வா’ மாதுளம் பழங்கள், முதன் முதலாக, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
உலகளவில், இந்தியா, ஆண்டுக்கு, 20 லட்சம் டன் மாதுளைகளை உற்பத்தி செய்து, முதலிடத்தில் உள்ளது. இருந்தபோதிலும், 20 ஆயிரம் டன் அளவிற்கே, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாதுளை ஏற்றுமதியாகிறது. இது, அமெரிக்க ஏற்றுமதியால், இந்தாண்டு, 50 ஆயிரம் டன் ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.