17/11/2022
வணக்கம் ,
கடந்த வாரம் நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் உலா - ULAA அழைத்துச் சென்ற வயநாடு பயணத்தை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆவலோடு நான் உங்கள் பயணங்களின் தகப்பன் அங்கப்பன் மாயராஜ்.
உலா இதன் நோக்கம் பயணங்களின் மூலம் கிடைக்கும் ஒரு தொகையை ஆதரவற்ற மற்றும் எச்ஐவி பாதித்த குழுந்தைகளின் நலனுக்கும் கொடுப்பதற்கு இதில் இடம் பெற்று தங்களின் ஆதரவை தரும் உலா குடும்பத்தாரோடு பயணப்படுவோம்.
ஒருங்கிணைப்பாளர் ஆகிய நானும் வீராவும் கடந்த மாதம் சென்று இடம் தேர்வு செய்து வந்தோம்.வயநாடு மிக அழகான ரம்மியமான காட்டுக்குள் ஓர் இடத்தை தேர்வு செய்து வந்தோம்.வந்த மறு தினமே பயண விபரங்களை பகிர்ந்தோம்.அந்த முதல் நாளில் இருந்து பயணம் தொடங்கும் நாள் வரை இணைந்து கொண்டே இருந்தனர்.மொத்தம் 100 இலக்கானது இம்முறை காரணம் அங்கே அத்தனை நபர்களுக்கான வசதிகள் இருந்தது. முதல் முறை இத்தனை நபர்கள் சற்று பதட்டமாக கூட இருந்தது என்று சொல்லலாம்.
இந்த முறை முன்னேற்பாடாக நானும் வீராவும் முதல் நாளே கோழிக்கோடு சென்றுவிட்டோம்.வரும் நபர்களை அங்கே இருந்து நாம் அழைத்துக் கொண்டு வயநாடு செல்ல வேண்டும் என்பதால்.இதோ எங்களின் உலா குடும்பத்தாரை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன் வாங்க.
சென்னையில் இருந்து சசி,கார்த்தி,பாலன்,சரவணன்,மணிமாறன்,ஜெயகுமார்,சிவா,வசந்த்,பிரவீன் ,தேவா,வசுதேவ கிருஷ்ணன்,சரவணகண்ணா,மதன்,மகேஷ்,ஜோதி,ஆண்டவர்,மகா,திவாகர்,கௌதம்,பிரகாஷ்,மதன் இவர்களோடு தினேஷ்,தியாகா,சிட்டு,மணிபாலா,அன்னபூரணி,உமா,விக்னேஷ் அங்கப்பன், அருண்,சண்முகம்,சித்ரா,ராஜேஷ்,நவீன்,பிரகாஷ் மற்றும் கிரிஷ்டா அவர்களின் குடும்பத்தார் 8 நபர்கள் கௌசி,வாணி,லதா,உதயா,புனிதா,கார்த்தி,அகஸ்யா,நவீன்,தனுஜா மற்றும் கௌதம்,சலான் ,பெருமாள்,லஷ்மி,சுபாஷ்,நிஷா,ஜனனி,எடிசன்,உமர்,அராபத்,கண்ணன் வைரப் பெருமாள்,ப்ரியா,விஜய் என்று ஒரு பெரும் படை திருச்சியில் இருந்தும் புதுகையில் இருந்து சரவணன் மற்றும் வீரா அம்மா,சேலம் சூர்யா(க்கள்)ஹரி,ஓசூரில் இருந்து சேஷசலபதி,கௌதம்,தனசேகர்,கோவையில் இருந்து மலர்விழி,சினேகா,நெப்போலினி,திருநெல்வேலியில் இருந்து சிவா திருப்பூரில் இருந்து மனோஜ்,சரண்யா,ப்ரனவ்,முகேஷ்,சரப்ஷ் என்று மொத்தம் 84 நபர்கள்.
சனிக் கிழமை காலை அனைவரும் வந்து சேர கோழிக் கோடு கடற்கரை சென்று கடலோடு சிறிது விளையாடி பின் காலை உணவை முடித்து எங்களுக்கான ஏற்பாடு செய்த இரண்டு பேருந்துகள் வரவும் அனைவரும் ஏறிக் கொள்ள உலாவின் பயணம் அந்த மலைகாட்டில் நிலை கொள்ள ஆட்டமும் பாட்டமுமாக நகர்ந்து சென்றது.
வளைந்த சாலைகள், கொண்டைஊசி வளைவுகள், கேரளத்து பசுமை,பனி மூடிய எதிர் சாலை,காதை கூசும் குளிர் என பசுமை தேசத்தில் பயணித்து கொண்டே இருந்தோம்.கோழிக்கோடில் இருந்து நாங்கள் செல்ல வேண்டிய 900 காண்டி 78 கிமீ நீண்ட பேருந்து பயணம் நடுவில் லக்கடி காட்சி முனை பகுதியில் நின்று ஒரு சில புகைப்படங்களோடு கடந்து சூச்சுபாரா அருவியை அடைந்தோம்.
நுளைவு கட்டணம் செலுத்திவிட்டு நமது குழுவினரோடு அந்த அருவியை நோக்கி நடுங்கும் குளிரோடு மாலை 4 மணிக்கு சென்றடைந்தோம்.அருவியை நெருங்கிவிட்டோம் என்பதை அந்த சத்தம் உறுதி செய்கிறது. அதோ நீர் தாரகை தன் சலங்கை கட்டி கால் தட்டி கை பரப்பி எங்களை வரவேற்றாள்.ஆகாயம் இருந்து தரை இறங்கும் கங்கை போல் பிரவாகமாய் வெள்ளி பாளம் தரை இறங்கி கொண்டதை கண்டோம்.அனைவரும் குழந்தைகளாகி துள்ளிக் குதித்து தண்ணீர் புகுந்தோம்.அருவின் பேர் இரைச்சலே சற்று அதிர எங்களின் உலா குடும்பத்தாரின் ஆரவார ஓசை அதிர்ந்தது.ஆனந்த குளியல் முடித்து அனைவரும் கிளம்பி பேருந்து வந்து சேர்ந்தோம்.
மேப்பாடியில் எங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு தங்கும் இடத்திற்கான ஜீப் வரவும் அதில் ஏறிக் கொண்டோம்.ஒரு ஜீப்க்கு 8 நபர் மொத்தமாக 10 ஜீப் மாலை சூரியன் மறைந்து இரவின் இருள் சூழ ஜீப் முன் விளக்கு வெளிச்சத்தில் பயணித்தோம்.
இந்த சாலை மலை மேல் உள்ள தங்குமிடம் நோக்கி செல்கிறது முழுக்க முழுக்க ஆப் ரோடு சவாரி.குண்டும்,குழியுமாக மழை பெய்த ஈரச் சகதியில் இரும்புக் குதிரை பயணம் என்றே சொல்லலாம்.குலுங்கி குலுங்கியும் குதித்தும் அந்த ஜீப் எங்களை மரண பயத்தோடு குதுகளம் கொடுத்து கொண்டே இருந்தது.
ஏட்டா எப்போ மேல எத்தும் என்று நாம் கேட்க அதற்கு நமது குழுவினரோ வாய் வழியா குடல் வருவதற்கு கொஞ்சம் முன்னாடினு நினைக்கிறேன் டாடி என்று சொல்ல அந்த டிரைவர் தன்னை மறந்து சிரித்த நிமிடங்களும் உண்டு ஒரு வழியாக கேம்ப் வந்து சேர்ந்தோம்.
உலாவின் பயணம் என்றாலே எங்களை இயற்கை அன்னை தன் மழை நீரை பன்னீராய் தெளித்து வரவேற்பது என்பது வழக்கமாகிக் கொண்டால் போலே இந்த முறையும் அவள் எங்கள் அனைவரையும் தன் சுகந்த பன்னீரால் வரவேற்றது மனதிற்கு ஆனந்தம்.
அவரவர்களுக்கு கேம்ப் தேர்வு செய்து அமர்த்திவிட்டு எங்களின் உலா ஏற்பாடு செய்திருந்த கேரளத்து கொஞ்சும் குரல் பாடகர்களின் பாட்டு கச்சேரி அதனோடு இரவு உணவு சாரல் மழை ஆட்டம் என இரண்டு மணி நேர கொண்டாட்டம்.இந்த முறை கிரிஷ்டாவின் மகள் ஜாய்சிலி பிறந்தநாள் கொண்டாட்டம் என அந்த இரவு மிக அழகான மறக்க இயலாத நினைவுகளை தந்துள்ளது.
மழை என்பதால் அட்டைபூச்சி தனது பலத்தை காட்டியது முதலில் அட்டை என பயந்த நமது குழுவினர் சற்று நேரத்திற்கு பிறகு மிக சகஜமாக அதை கையாண்டனர்.என்னை எல்லாம் அட்டை குடும்பமாக கடித்து பசி ஆற்றிக் கொண்டது என்றே சொல்லலாம்.ரத்த தானம் உடலுக்கு நல்லது தானே, என்ன நான் சொல்றது சரிதானே இப்படி தான் மனம் தேற்றிக் கொண்டோம்.
மழை இரவில் கடும் குளிரில் டென்ட் உள்ளே ஸ்லீப்பிங் பேகில் உடல் நுளைத்து உறங்கும் அந்த ஏகாந்த சுகத்தை என்னவர்கள் மன நிறைவோடு உறங்கிப் போனார்கள்.உடல் அயர்ச்சிக்கு உறக்கம் என்பது ஊறிய தேன் பாலா போல் தான் உவகை தரும் உறக்கமாகி போனது.
காலை தேநீர் 6 மணிக்கு குடித்து எங்களின் ஹைகிங் அதாவது நீர் வரும் அருவிப் பாதையில் பயணம் மிக சவாலான பயணமாக ஒரு இரண்டு மணி நேரம் ஆனந்தமாக ஓடிப் போனது.ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து ஏற்றி விட்டு அந்த அழகிய சூழலை புகைப்படமாக்கி அருவியில் குளித்து என கொண்டாடி களித்தனர்.
அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு கேம்பில் இருந்த உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்க ஆயத்தம் ஆனோம்.ஆமாங்க அதே ஆப் ரோடு குதித்து செல்லும் ஜீப் நேராக கண்ணாடி பாலம் சென்று இறக்கிவிட்டது.ஒரு சில நபர்களோடு நாங்கள் நடந்தே அந்த அழகிய வனத்தில் பயணித்தோம்.
கண்ணாடி பாலம் அந்தரத்தில் ஒரு பாலம் அதள பாதளத்தின் காட்டி எதிர் முனை அழகின் ரம்மியம் என சற்று கூடுதலான அழகு தான்.கயிறு பாலத்தில் மூன் வாக் செய்து எதிர் உள்ள பாலம் அடைவதற்குள் அப்படி ஒரு திக் திக் நிமிடங்கள்.கயிற்றில் நடந்து சாகசம் மற்றும் ஜிப் லைன் சவாரி என சகல வித விளையாட்டுகள் முடித்து மீண்டும் ஜீப் ஏறி பயணித்து மீனாட்சி பாலத்தில் நின்ற எங்களின் பேருந்திடம் வந்து சேர்ந்தோம்.எங்களை அழைத்து வந்த அந்த ஜீப் சாரதிகளுக்கு நன்றியை கூறி எங்களின் பேருந்தில் ஏற பயணம் தொடங்கியது.
மதிய உணவை ஒரு உணவகத்தில் பிரியாணியோடு முடித்துக் கொண்டு கோழிக்கோடு நோக்கி பேருந்து சென்றது.உலா தனது குடும்பத்தாருக்கு இந்த முறை ஸ்டேன்லஸில் வாட்டர் பாட்டில் உலா என்ற தனது பெயர் பொதித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து தனது நன்றியை சொல்லிக் கொண்டது. கடைசி நேர திக் திக் பயணம் என்றே சொல்லலாம் 7 மணி ரயிலை பிடிக்க வேண்டும் என்ற மனநிலையோடு பயணித்தோம்.நல்ல காலம் எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லாத காரணத்தால் அனைவரும் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.
குழுவாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அவரவர் ஊர்களுக்கு செல்ல பிரியாவிடை சொல்லி ரயிலில் ஏறிப் பயணித்தோம்.கலகலப்பான மனங்களுக்குள் கண்ணீர் வெளிக் காட்டாது புன்னகையை புதையலாய் கொடுத்து பிரிந்து வந்தோம். அடுத்த உலாவின் பயணத்தில் இணைவோம் என்று சொல்லி சென்றோம்.
மொத்த பயணத்திலும் மூன்று பெண் தேவதைகள் மூன்று ஆண் தேவைதகள் இவர்களின் கொஞ்சும் மழலை பேச்சும் அடுத்தடுத்து புதிது புதிதாக செய்யும் சேட்டைகளும் அவர்களோடு இணைந்து எங்களின் அலப்பரைகளும் என்று மிக அருமையாக சென்றது.மீனாட்சி,ஜாய்சிலி,சர்மிளிஎன்ற மூன்று குட்டி தேவதைகள், ப்ரனவ் ,கிரிஷ்டோபர் ,ரிங்கோ என்ற மூன்று ஆண் தேவதைகள் சிறியவர்களை அழைத்து வந்து எங்களை மேலும் ஊக்கப்படுத்தும் குடும்பத்தாருக்கு நன்றிகள் பல பல என்றும் என்றென்றும்.
பறபற பாட்டு கேட்டாலே மீனு குட்டி ஞாபகம் தான் அழகி .
ஒரு பயணம் என்ன சொல்லித் தரும் என்றால் இயல்பாய் இருக்கவும், ஏனையோரை நேசிக்கவும், இயற்கை சார்ந்த விடயங்களின் புதிர்களை அறியவும்,அன்பை செலுத்தவும் என்று பல பரிணாமங்களை தன்னகத்தே கற்று தருகிறது.இந்த பயணமும் அதையும் அதைத் தாண்டி புதியன சிலவும் இனி காண வேண்டிய ஆசையையும் தந்துள்ளது.
அடுத்த ஒரு பணத்தோடு உலாவோடும் உங்களை சந்திக் காத்திருக்கும் உங்களின் பயணங்களின் தகப்பன்
Angappan Mayaraj
நன்றி