12/06/2024
பாரதியின் ஞான குரு யாழ்ப்பாணத்து சாமிகள்
(நன்றி: Sinnakuddy Mithu )
தமிழ் சித்தர்கள் பற்றிய அறியும் ஆவல் எப்பொழுதுமே என்னுள் இருந்திருக்கிறது .அவர்கள் விட்டு சென்ற வர்ம கலைகள் ,மருத்துவம் போன்றவை எனக்கு ஆச்சரியமூட்டுவையாகவே இருந்திருக்கிறது
அவர்களது தத்துவங்கள் இக்கால விஞ்ஞான அறிவியலுக்கு உட்படுத்தலாமா இல்லையா என்பவர்களின் கருத்துக்களை ஒரு பக்கம் தள்ளி விட்டு
தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் போல இலங்கையிலும் இருந்திருக்கிறார்களா என்று தேடிய பொழுது பாரதியார் தனது குருவாக நினைத்து பாடிய யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த வியாபாரி மூலையை சேர்ந்த யாழப்பாண சுவாமிகள் என்று அழைக்கப்பட்டவர் ஒரு சித்தர் என்று கூறப்படுகிறது
அவர் நடத்தி காட்டிய சித்து விளையாட்டுக்கள் இவை எனக்கூறப்படுகிறது
(இவரது சித்தாடல் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிக்குள் நான் போக விரும்பவில்லை)
யாழ்ப்பாணத்து சுவாமிகளின் அற்புதங்களும் சித்துக்களும்
1.சுவாமிகள் பொலிகண்டி கடல் நீர்ப்பரப்பில் பல்வேறு இடங்களிலும் நின்று
காட்சி கொடுத்தார்கள்.
2.நாகை நீலலோசனி அம்மன் ஆலய வாசலில் நிஷ்டையின் பின் 41 நாட்கள் வாயூறு
தண்ணீரில் இருந்தார்கள்.
3.தீயிற் காய்ச்சிய இரும்பினை இவரது பாதத்திற் சுட்டபோது சுவாமிகள்
மௌனமாக இருந்தார்கள்.
பொலிசார் சுவாமிகளை அறையில் விட்டுப் பூட்டிவைத்தனர். சிறிது நேரத்தில்4.
அவர் அறையில் இல்லாமல் கடற்கரையோரத்தில் நிஷ்டையில் இருந்தார்கள்
_______________________________________________________________________
சுவாமிகள் சித்தாடலை விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------
1924 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “அருளம்பலம் சந்தேக நிவர்த்தி” எனும்
தமது நூலினை புதுவை ஜெகநாதம் அச்சுக்கூடத்தில் பதிப்பித்துள்ளார்.
1926 : இவர் “கற்புநிலை” என்ற தமது நூலை புதவை கலாநிதி அச்சுக்கூடத்தில்
பதிப்பித்துள்ளார்.
1927 : அடுத்து இவர் “அருவாச தேவ ஆரம்”, “சீவதரிசி” எனும் இரு
நூல்களையும் புதுவை கலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பித்துள்ளார்.
இவற்றில் இருந்து 1914 ஆம் ஆண்டிலிருந்து 1927 ஆம் ஆண்டு வரையும்
யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் புதுவையில் இருந்தார்கள் என்பது தெளிவு.
1928 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நாகை நீலலோசனி அம்மன் பேரில்
“தோத்திரம்”, “ஊஞ்சல்” எனும் இரு நூல்களையும் ஜனனோபகார அச்சுக்கூடம் -
நாகபட்டணத்தில் பதிப்பித்துள்ளார்.
1929 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “கற்புநிலைச் சுருக்கம்” எனும் நூலை
ஜனனோபகார அச்சுக்கூடம் - நாகபட்டணத்தில் பதிப்பித்துள்ளார்.
1929 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நாகபட்டணத்திலிருந்து இலங்கைக்குத்
திரும்பி வந்து வியாபாரிமூலையிலும், வதிரியிலும் தங்கினார்கள்.
1930 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் மீண்டும் நாகபட்டணம் சென்றார்கள்.
வியாபாரிமூலை செல்வந்தரான வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் நாகபட்டணத்தில்
காணி வாங்கி மடம் கட்டி யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் தங்க வசதி செய்து
கொடுத்தார்கள்.
1931 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “பழை வேற்பாட்டுடன் படிக்கை” எனும்
நூலினை ஜனனோபகார அச்சுக்கூடம் - நாகபட்டணத்தில் பதிப்பித்தார்.
1935 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் “ஆதிபுராணம்” எனும் நூல் காமினி
அச்சுக்கூடம் - கண்டியில் பதிப்பிக்கப்பட்டது.
1939 : யாழ்ப்பாணம் புலொலி மேற்கு திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள்
யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை நாகபட்டணம் சென்று சந்தித்தார்கள்.
திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் உத்தம
சிஷ்யனானார்.
1940 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “ஆதி நீதி” எனும் நூலை ஜனனோபகார
அச்சுக்கூடம் - நாகபட்டணத்தில் பதிப்பித்தார்.
1942 : நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் முன்குறித்த
வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்களுடன் கூடக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து
அல்வாய் வடக்கு திருமகள் வாசம் எனும் அவரது இல்லத்தில் தங்கினார்கள்.
1942 : மார்கழி மாதம் 3 ஆம் திகதி அத்த நட்சத்திரத்தில் யாழ்ப்பாணத்துச்
சுவாமிகள் அவரது முதல் சிஷ்யரான திரு.வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்கள்
இல்லத்தில் மகா சமாதி அடைந்தார்.
1942 : மார்கழி 5 ஆம் திகதி வியாபாரிமூலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத
வீரபத்திரர் ஆலயத்தின் மூன்றாம் வீதியின் ஈசான மூலையில் சமாதி
வைக்கப்பட்டு செப்பனிடப்பட்ட வைரக்கற்களால் திருமந்திரத்தின் படி கோவில்
கட்டப்பட்டது. திரு.ச.கணபதிப்பிள்ளை ஆகிய வேற்சாமியார் 1942 இல் இருந்து
நித்திய பூசைகளைப் பொறுப்பேற்று தமது இறுதிக்காலம் வரை செய்தார்கள்.
தொடர்ந்து நித்திய பூசைகளும், குரு பூசைகளும் நடைபெற்று வருகின்றன.
1943 : நாகபட்டணம் அக்கரைகுள ரோட்டில் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள்
மடாலயத்தில் சித்திரபானு வருஷம் தை மீ.3உ (16.01.43) இல் நடந்தேறிய
குருபூசையன்று ஸ்ரீலஸ்ரீ அருளம்பல சுவாமிகள் பேரில் ஆனந்தக்களிப்பு பாடி
அளிக்கப்பட்டது.
1961 : திரு.அ.ந.கந்தசாமி என்பார் ஸ்ரீலங்கா ஆகஸ்ட் இதழில் “ஞானம்
வளர்த்த புதவை” எனும் கட்டுரையில் பாரதி கூறும் யாழ்ப்பாணத்து சுவாமிகள்
யார்? என்னும் வினாவினை எழுப்பினாரே தவிர யார் என எவரையும்
இனங்காணவில்லை.
1962 : யாழ்ப்பாணத்து சுவாமிகளது அன்பரான திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள்
ஸ்ரீலங்கா 04.1962 இல் எழுதிய கட்டுரையில் யாழப்பாணத்து சுவாமிகளே
அருளம்பல சுவாமிகள் எனக் கூறியிருந்தார்கள்.
1963 : 07.05.1963 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் “அருளம்பல
சுவாமிகளே பாரதியாராற் போற்றப்பட்ட யாழ்ப்பாணத்துச் சுவாமி” எனக் கொண்டு
எடுக்கப்பட்ட விழாவில் சமாதி ஆலயத் தருகில்” பாரதியின் ஞானகுரு
யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நினைவாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
நிறுவியது எனும் வாசகம் பொறித்த நடுகல் நாட்டினர். இவ் விழாவினை
முன்னிட்டு அன்றைய தினகரன் பத்திரிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி,
சிவத்தம்பி போன்றோரின் கட்டுரைகளும், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்
புதுவையில் வெளியிட்ட “காற்றை நிறுத்தக் காணுவன் விடையை” எனும்
துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டன.
09.05.1963 இல் ஈழநாடு தனது பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில்
“பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமிகளே” என செய்தி
வெளியிட்டிருந்தது. 15.05.1963 இல் வெளியான ஆத்ம ஜோதி மாத சஞ்சிகையின்
அட்டையில் அருளம்பல சுவாமிகளின் படம் பிரசுரிக்கப்பட்டு “பாரதியின்
ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்” என வெளிவந்தது. ஆதன் ஆசிரியரான
க.இராமச்சந்திரன் அவர்கள் அருளம்பல சுவாமிகளே யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்
எனக் குறிப்பிட்டுள்ளார்.
1979 : திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் “புற்றளைக்கரசே” என்னும் அவரது
நூலில் அருளம்பல சுவாமிகள் மீது பாடிய மூன்று பாடற் தொகுதிகளை
வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மெய்கண்டார் ஆதீன முதல்வர் ஸ்ரீமத்
ஞானப்பிரகாச தம்பிரான் சுவாமிகள் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் ஆலயச்
சூழல்களில் கவரப்பட்டு பஜனையும் வேதாந்த வகுப்புக்களும் தமது இறுதி
பரியந்தம் வரை நடாத்தி வந்தார்கள்.
1981 : திரு.சி.மு.தம்பிராசா அவர்கள் “பாரதி வர்ணித்த ஜகத்தினிலோர்
உவமையில்லா யாழ்ப்பாணத்துச் சுவாமி அருளம்பல சுவாமிகளே” என 22.11.1981
இல் வீரகேசரியில் அருளம்பல சுவாமிகள் குருபூசையை முன்னிட்டு எழுதி
வெளியிட்டுள்ளார். திரு.சி.நா.சொக்கநாத பிள்ளை அவர்கள் சிவஞானப்பிரகாச
சபைக்கூடாக யாழ்ப்பாணம் மேலைப்புலொலி சைவப்பிரகாச வித்தியாலயத்தில்
யாழ்ப்பாணத்துச் சுவாமிகளது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடினார்கள்.
1982 : திரு.ஆ.சபாரத்தினம் அவர்கள் 31.01.1982 இல் தினகரன் வாரமஞ்சரியில்
‘தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதிக்கு முன்னும் பின்னும்’ என்னும்
கட்டுரையில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் அருளம்பல சுவாமிகளே எனக்
குறிப்பிட்டிருந்தார்.
1982 : திரு.க.அம்பிகைபாகன் அவர்கள் 07.02.1982 இல் வீரகேசரியில் ‘பாரதி
பாடிய யாழ்ப்பாணத்துச் சுவாமியே அருளம்பல சுவாமிகள்’ என யாழ்ப்பாணத்துச்
சுவாமிகள் நிஷ்டையில் இருந்து எழுந்தவுடன் எடுத்த படத்துடன்
வெளியிட்டிருந்தார்.
1990 : இந்து கலைக்களஞ்சியத்தில் திரு.பொ.பூலோகசிங்கம் அவர்கள் பாரதி
போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் வியாபாரிமூலையைச் சேர்ந்த அருளம்பல
சுவாமிகளே என ஆதாரங்கள் நிலைநாட்டியுள்ளார்.
1992 : வியாபாரிமூலையில் டாக்டர் மு.க.முருகானந்தன் அவர்கள் தலைமையில்
யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சபை அமைக்கப்பட்டு கலாநிதி நா.ஞானகுமாரன்
(சிரேஷ்ட விரிவுரையாளர், மெய்யியற்றுறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.)
அவர்கள் ‘பாரதி போற்றிய யாழப்பாணத்துச் சுவாமிகள்’ வியாபாரிமூலை, அல்வாய்
வடக்கு அருளம்பல சுவாமிகளே என தகுந்த ஆதாரங்களுடன் “பாரதி போற்றிய
அருளம்பல சுவாமிகள்” எனும் ஆய்வு நூலினை வெளியிட்டுள்ளார்கள்.
1998 : 06.09.1998 இல் ஸ்ரீ இராமகிருஷ்ணமிசன் இலங்கை கிளையின் தலைவர்
சுவாமி ஆத்மகணானந்தா அவர்கள் தலைமையில் ஸ்ரீ இராமகிருஷ்ணமிசன்
சுவாமிகளும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் ஆலயத்திற்கு வருகைதந்தனர்.
2000 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகளான சி.வே.அருளம்பலசுவாமிகள் அருளிச்செய்த
“மண் விண் வினாவிடை” எனும் நூல் பேராசிரியர் நா.ஞானக்குமாரன் அவர்களால்
பதிப்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் இந்து சமயப்பேரவையால் வெளியிடப்பட்டது.
2001 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சபை (அல்வாய் வடக்கு, சி.வே.அருளம்பல
சுவாமிகள், வதிரி, வியாபாரிமூலை) இலங்கை இந்து சமய, இந்து கலாச்சார
அலுவல்கள் திணைக்களத்தினால் 18.12.2001 இல் HA/4/J/197 ஆம் இலக்கத்தில்
பதிவு செய்யப்பட்டது.
2003 : திரு.C.S.முருகேசன் எழுதிய பாரதி கண்ட சித்தர்கள் என்னும்
நூலிலும் புதுச்சேரிச் சித்தர்கள் என்னும் நூலிலும் ஸ்ரீ கதிரவேலுச்
சுவாமிகளே பாரதியார் போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் என நிறுவ போதிய
சான்றுகள் காணப்படவில்லை.
2004 : வியாபாரிமூலை யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சமாதி ஆலயம்
புதுப்பிக்கப்பட்டு சுவாமி அருளானந்தா அவர்கள் தலைமையில் 25.11.2004 இல்
குடமுழுக்கு செய்யப்பட்டது. அன்று சுவாமி அருளானந்தா எமுதிய
“யாழ்ப்பாணத்து மௌன குருவின் சரித சுருக்கம் - மீண்டும் அருள்தர வந்தேன்”
என்னும் நூலும் வெளியிடப்பட்டது. திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள்
குலத்தோன்றல்களான டாக்டர் சதானந்தன், திருவாளர்கள் சி.முத்துக்கிருஷ்ணன்,
சா.நவரத்தினராசா போன்றவர்கள் சமாதி ஆலயப் புனருத்தாரணப் பணிக்கு
பொருளுதவி புரிந்ததோடு நித்திய பூசைகளையும் பொறுப்பேற்றுள்ளனர்.
2006 : கலாநிதி க.குணராசா அவர்கள் “பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்து
ஆறுமுக சுவாமி” என ஒரு நூலினை 2006 இல் வெளியிட்டார்கள். இந்நூலிற்கு
ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப் படாமையினால் அது ஒரு புனைகதை
எனக்கருதப்படுகிறது.
2006 - 2007 : திரு.க.சந்திர மௌலீஸ்வரன் தினக்குரல் நாளாந்தப்
பத்திரிகையில் (17,24,31.12.2006 : 07.01.2007) “பாரதியார் போற்றும்
யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்?” என ஆராய்ந்துள்ளார். ஆனால் இவரும்
யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் முழுமையான தகவல்களையும் வழங்கவில்லை.
2007 : பேராசிரியர் நா.ஞானக்குமாரன் அவர்கள் “பாரதி போற்றிய
யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்?” எனும் கட்டுரை எழுதி அதில்
யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சி.வே.அருளம்பல சுவாமிகளே என ஆதாரங்கள் காட்டி
தொண்டமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரம வெளியீடான 2007 ஐப்பசி,
கார்த்திகை ஞானச்சுடர் மலரில் வெளியிட்டுள்ளார்கள்
நன்றி--தொகுப்பு : திரு.சி.மு.தம்பிராசா M.A