23/10/2023
டிரைவர்களையும் மதிப்போம்!
தமிழக மக்களால் கலைவாணர் எனப் போற்றப்பட்ட என்.எஸ். கிருஷ்ணன் 50 களின் மத்தியில் செய்த ஒரு காரியம் ஒட்டுமொத்த மக்களையும் திரும்பிப்பார்க்க வைத்தது. அது பல ஆண்டுகளாக தனக்கு கார் ஓட்டுனராக பணயாற்றிய ராஜி என்பவருக்கு தமிழகத்தின் அத்தனை பிரபலங்களையும் அழைத்து ஒரு பாராட்டு விழா நடத்தியதுதான்.
தமிழகமே அவரது மனிதநேயத்தை எண்ணி வியந்த சம்பவம் அது. ஓட்டுநர் பணி எத்தகைய கடுமையான மற்றும் பொறுப்புள்ள பதவி என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
டிரைவிங் என்பது மற்ற வேலைகளைப்போல அல்ல. இது தன் உயிரை மட்டுமல்லாமல், மற்றவர்களின் உயிரையும் சேர்த்து பாதுகாக்க வேண்டிய, கவனமுடன் செய்யப்படவேண்டிய பொறுப்புள்ள ஒரு வேலை. அப்படிப்பட்ட டிரைவிங் வேலையைச் செய்பவர்களும், வேலையை கொடுப்பவர்களும் தங்களின் பொறுப்புணர்ந்து நடந்துகொண்டால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
திண்டுக்கல் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, வேகமாக வந்த ஒரு அரசுப் பேருந்து மோதி யதால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் நடந்துனர் உட்பட இரண்டு பேர் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந் தனர். இதற்கு காரணமான அரசுப் பேருந்து டிரைவரை விசாரித்ததில் அவர் கூறிய காரணம் மிகவும் அதிர்ச்சிகரமானது. தனக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக கொடுக்கப்பட்ட கூடுதல் பணிச்சுமைதான் இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறி இருக்கிறார்.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்யும் ஒரு மிகப்பெரிய அரசு நிறுவனத்தில் இப்படிப்பட்ட தவறு கள் எப்படி நடக்கின்றன? ஊழியரின் மேல் இருந்த அதீத நம்பிக்கையும் அலட்சியமும்தான் காரணம். என்ன தான் மனிதர்கள் இயந்திரம் போல உழைத்தாலும் அவர்கள் இயந்திரங்கள் அல்ல. ஓட்டுநர் பணியில் தூக்கமும் ஓய்வும் மிக மிக அவசியம். இதை இந்தத் துறையில் இருப்பவர்களே உணராமல் இருப்பதுதான் அவலம்.
இரவுப் பயணங்கள் மற்றும் வெகு தூர பயணங்களை மேற்கொள்ளும் டிரைவர்களுக்கு, போதுமான ஓய்வும் தூக்கமும் அவசியம். முதலாளிகள் இது பற்றி எல்லாம் கவலைப்படாமல் டிரைவர்களை வேற்று கிரக இயந்திர மனிதர்களாக நினைத்துக்கொண்டு வேலை வாங்குவதால், சமீப காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துவிட்டன. ஓட்டுநருக்கு போதிய ஓய்வும் உறக்கமும்தான் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும்.
மேலும் ஓட்டு பலர் சிகரெட், மது, அல்லது வேறு வஸ்துக்கள் என ஏதோ ஒரு போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள். டிரைவிங் வேலை செய்வதற்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டும் மிக மிக முக்கியம் என்பதை சிலர் உணர்வதே இல்லை. இதுபோன்ற அலட்சியங்கள் பல குடும்பங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு எனது உறவினர் ஒருவரின் குடும்பம் வேறு ஊருக்கு இடமாற்றம் ஆனது. அப் போது வீட்டுச் சாமான்களை ஒரு டெம்போ வேனில் ஏற்றிக்கொண்டு எனது உறவினருடன் நானும் பயணம் செய்தேன். அந்த இரவுப் பயணத்தில் அந்த வண்டியின் டிரைவர் இரவு முழுவதும் அளவுக்கதிகமான சிக ரெட்டுகளை பாக்கெட் பாக்கெட்டுகளாக ஊதிக்கொண்டே வந்தார். இது போன்ற ஆரோக்கியத்துக்கு தீங்கு செய்யும் செயல்களை செய்வதால்தான் ஹார்ட் அட்டாக் போன்ற திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன.
சாலையில் நடக்கும் விபத்துக்களில் பெரும்பான்மையானவை தூக்கமின்மையாலும், அலட்சியத்தாலும் நடக்கின்றன. இப்போது பல விபத்துகளுக்கு செல்போன்கள் காரணமாக இருக்கின்றன. 'செல்வத்துள் செல் வம் செவிச் செல்வம்' என்று வள்ளுவர் சொன்னார். ஆனால் இப்போது சாலையில் டிரைவிங் செய்வோரில் பெரும்பான்மையானோர் காதுகளில் இயர் போன் இருக்கிறது.
தங்களுக்கு பிடித்தமனவற்றைத் தவிர வேறு எந்த ஒலிகளையும், அது உயிர் காக்கும் அவசியமான ஒலிகளாக இருந்தாலும் சரி, இவர்கள் கேட்கத் தயாராக இல்லை. இத்தகைய செயல்களால், அவர்கள் தங்களை நம்பி தங்கள் வாகனத்தில் பயணிப்போரின் எதிர்காலத்தையும் கேள்விக்குரியதாக்குகிறார்கள் என்பதை உணர்வதில்லை.
என்னதான் போக்குவரத்து காவலர்கள், மக்களிடம் சாலை விதிகளைப் பின்பற்றச் சொல்லி விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டாலும், சுய விழிப்புணர்வு வரும்வரை இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியாது. மேலும் சிலர் பையில் பணம் இருந்தால் போதும் எல்லா விதிகளையும் சுலபமாக மீறலாம் என்ற மனநிலையில்தான் டிரைவிங் செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
வாகனங்களை இயக்கும் பலர், வாகன விதிகளைப்பற்றி முழுமையாக அறிந்தவர்களில்லை. நண்பர்களின் வாகனங்களில் சில நாட்கள் ஓட்டப்பழகிக்கொண்டு அடுத்த சில நாட்களில் தனியே பயணிக்க துவங்கிவிடுவர். கத்துக்குட்டி டிரைவர்களான இவர்கள், எதிர்பாராத தருணங்களை சமாளிக்க முடியாமல் விபத்துகளை சந்திக்கின்றனர்.
டிரைவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அதே போல உயர் அதிகாரிகளும், முதலாளிகளும் டிரைவர்களின் வேலைத் தன்மையை அறிந்து நடந்துகொள்வது அவசியம்.
இந்தப் புரிதல் இருந்தால்தான் விபத்துக்களைத் தவிர்க்க உதவும். அப்போதுதான் அவசரமும் அலட்சியமும் விலை மதிப்பில்லாத உயிர்களை காவு வாங்குவதை தடுத்து நிறுத்த முடியும்.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்..
"பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான்"
“பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது
சேவை குணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது”
மனிதர்கள் நான்கு வகைப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது:
தனக்குத் தெரியாது என்பது தெரியாதவர்கள் – இவர்கள் முட்டாள்கள். இவர்களை விட்டுவிடுங்கள்.
தனக்குத் தெரியாது என்பது தெரிந்தவர்கள் – இவர்கள் எளிமையானவர்கள். சொல்லிக்கொடுங்கள்.
தனக்குத் தெரியும் என்பது தெரியாதவர்கள் – இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எழுப்புங்கள்.
தனக்குத் தெரியும் என்பது தெரிந்தவர்கள் – இவர்களே ஞானிகள்..