15/10/2021
🛩கடவுச்சீட்டு விநியோகிக்கும் பிராந்திய அலுவலக தகவல் 📫
கடவுச் சீட்டு (Passport) வழங்கும் பிராந்திய அலுவலகம் வவுனியாவில் அமைந்துள்ளது. அண்மையில் வலைத்தளத்தில் ஒருவர் பகிர்ந்த பயனுள்ள சில தகவல்கள் வருமாறு,
01.கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு மிக அண்மையில் உள்ளது.
02.காலை 08.30 மணிக்கு சமூகமளிக்கக்கூடியதாக செல்லல் வேண்டும். பிற்பகல் 01.30 மணி வரை விண்ணப்பங்களைக் கையளிக்க முடியும்.
03. கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு உட்செல்ல முன்னரேயே தங்களது ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுக்கலாம். தாங்களே நிரப்பித் தருவோம் என புரோக்கர்கள் வருவார்கள். அவர்களை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
தேவையான நிழற்பிரதிகளையும் அங்கு பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
04. நேரடியாக அலுவலகம் செல்லுங்கள்.
05. தேவையான ஆவணங்களை சரியாக உங்களுடன் எடுந்துச்செல்லவும்.
பிறப்பு, விவாகச் சான்றிதழ்களாயின் 06 மாத காலத்திற்கு உட்பட்டதாக பெற்றிருத்தல் வேண்டும்.
பெற்றோர் கடவுச்சீட்டு வைத்திருப்பின் அவற்றினையும் கட்டாயமாக எடுத்துச் செல்லவும்.
உங்களை அடையாளப்படுத்த தேசிய அடையாள அட்டை, அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இவற்றில் ஒன்று கட்டாயம் தேவை.
06. சான்றிதழ்கள் தமிழில் இருந்தாலே போதுமானது. ஆங்கில மொழி பெயர்ப்புத் தேவையில்லை.
07.அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றுபவர்கள் உங்களுக்கு சரியான வழிகாட்டுதலைச் செய்வார்கள்.
08.சென்றவுடன் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் இலக்க token இனை உடன் பெற்றுவிடுங்கள். தமிழ் மொழியில் யாவரும் எந்தவோர் விடயத்தினையும் பேசலாம்.
09. அவரிடமே கடவுச்சீட்டு புதுப்பிக்கும் படிவத்தை பெறுங்கள்.
அங்குள்ள உத்தியோகத்தர்கள் அல்லது ஆங்கிலம் தெரிந்த யாராவது பொதுமக்கள் படிவத்தைப் பூரணப்படுத்தித்தருவார்கள்.
10. புகைப்படத்தை அங்கேயே எடுக்க முடியும். நியாயமான கட்டணம் (250/-) அறவிடுவர். அதன் அச்சுப்பிரதி ஒன்றை உங்களிடம் வழங்குவார்கள். அதனை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
12. விண்ணப்பத்தில் ” சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டு (All Countries ) எனும் கூட்டினுள் சரி அடையாளமிடுங்கள். 3500/- கட்டணம். (01.01.2019 முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமான கடவுச்சீட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது)
11.ஆனால் விண்ணப்பத்தை உள்ளே சென்று கொடுக்கும்போது அங்குள்ள அலுவலர் 'எங்கே போவதற்குப் பாஸ்போட் எடுக்கிறீர்கள்' எனக் கேட்பார்.
இந்தியா போவதற்கு எனக்கூறியவர்களுக்கு 'India Only' என கடவுச்சீட்டில் பதிவிட்டு ஒரு வாரத்தினுள் விநியோகித்து இருக்கிறார்கள். 07 நாட்களுக்குள் கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
12. அவ்வாறு பாஸ்போட்டைப் பெற்றவர்கள் திரும்பவும் சென்று 'All Countries' என மாற்றம் செய்வதற்கு அலைந்த சம்பவங்கள் பல உள்ளன.
13. நீங்கள் எந்தத்தேசத்திற்கும் செல்ல முடியும், எனவே அவர் கேட்டால் அவுஸ்திரேலியா, கனடா, சுவிஸ், பிரான்ஸ், நோர்வே போன்றவாறு ஒரு நாட்டின் பெயரை கூறவும்.
14. அவ்வாறு கூறினால் கடவுச்சீட்டு 14 - 21 நாள்களுக்குள் உங்களது முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
15. நீங்கள் ஒரே நாளில் கடவுச்சீட்டை எடுப்பதானால் கொழும்பு, பத்திரமுல்லவுக்கே செல்லவேண்டும்.
16. வவுனியா போன்ற பிராந்திய நிலையங்களில் எடுக்க முடியாது.
17. வவுனியாவில் விண்ணப்பித்து ஒரே நாளில் பாஸ்போட் எடுத்து தருகிறேன். 10, 000 ரூபா தருகிறீர்களா ...?
எனச் சில ஏமாற்றுப் பேர்வழிகள் உத்தியோகத்தர் போல tip top ஆக காணப்படும் அவ் அலுவலகத்தினுள் ஆள்களிடம் பேச்சுக் கொடுக்கின்றனர்.
ஏமாந்துவிடவேண்டாம்.
18. பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பிள்ளையின் கடவுச்சீட்டை புதுப்பிப்பதாயின் தாய், தந்தை கட்டாயம் நேரில் செல்லவேண்டும் என்பதுடன்,
பிள்ளையையும் அழைத்துச் செல்ல வேண்டும். (பகிரப்பட்டது)