![அன்பர்களுக்கு வணக்கம்,நீண்ட நாட்களுக்கு பிறகு ஓர் கட்டுரையை வரைகின்றேன். வழக்கம் போல் அனைவரும் முழுவதுமாக படித்திட விழை...](https://img5.travelagents10.com/500/868/466925135008688.jpg)
13/01/2022
அன்பர்களுக்கு வணக்கம்,
நீண்ட நாட்களுக்கு பிறகு ஓர் கட்டுரையை வரைகின்றேன். வழக்கம் போல் அனைவரும் முழுவதுமாக படித்திட விழைகின்றேன்.
இந்த இடுகையால் ஒருதுளி அளவேனும் மேன்மையும் மாற்றமும் நிகழுமேயானால், அதுவே இக்கட்டுரை வடித்ததன் முழு வெற்றி மற்றும் பலன்...
முடிந்த அளவு சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்கின்றேன்.
நேற்றையதினம் திரு மயிலையில் வாயிலார் நாயனார் குரு பூஜை நிகழ்வுகளை முகநூல் வாயிலாக கண்ணுறும் வாய்ப்பு கிட்டியது. அப்பப்பா எத்துனை சிறப்பான வழிபாடு, எத்துனை சிறப்பான அபிஷேகம் ஆராதனை, நாயனார் மிக அழகிய புஷ்ப பல்லக்கினில் எழுந்தருளி காட்சி கொடுத்தார், காண கண்கோடி வேண்டும் என்பதாய் இருந்தது.
இத்துனை விமர்சையாக வழிபாட்டினை செய்தருளிய புரவலர்களுக்கும், நாயனார் நாயனார் பால் அன்பு கொண்டுள்ள அடியார்களுக்கும், வழிபாட்டினை சீரும் சிறப்புமாக அமைத்த ஏற்பாட்டாளர்களின் திருப்பாதம் பணிந்து வணங்குகின்றேன்.
ஆனால் இந்நிகழ்வு ஒரு ஆழ்ந்த சிந்தனையை அடியேன் மனதிலே எழச் செய்தது... இதே போல 63 நாயன்மார்களுக்கும் அவரவர் அவதார முக்தி திருத்தலங்களில் குரு பூஜை தினங்களில் சிறப்பான வழிபாடாக நடைபெறுகின்றதா என்றால், உண்மையில் இல்லை என்பதே பதிலாக அமைகின்றது.
நால்வர் குரு பூஜை வழிபாடுகள், நால்வர் பெருமக்கள் அவதரித்த மற்றும் முத்தி பெற்ற தலங்களில் சிறப்பான முறையினில் நடைபெறுகின்றது, அதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. (எ.டு : சீர்காழி, திருநல்லூர்பெருமணம், திருவாமூர், திருப்புகலூர், திருநாவலூர், திரு அஞ்சைக்களம், திருவாதவூர், திரு தில்லை)
மேலும் பல தலங்களில் சிறப்பான முறையினில் நாயன்மார் குரு பூஜைகள் செவ்வனே நடைபெறுகின்றது, எ.டு : திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் குரு பூஜை, அம்பர் மாகாளத்தில் சோமாசி மாற நாயனார் குரு பூஜை, பெண்ணாகடத்தில் கலிக்கம்ப நாயனார் குரு பூஜை செவ்வனே நடைபெற்றுக்கொண்டு தான் உள்ளன.
ஆனால் வரிஞ்சையூர் - சக்தி நாயனார் அவதார தலம், களப்பால் - கூற்றுவ நாயனார் அவதார தலம், ஏனநல்லூர் - ஏனாதி நாயனார் அவதார தலம், அரிசிற்கரைப்புத்தூர் - புகழ்த்துணை நாயனார் , மிழலை, காம்பிலி, பெருமங்கலம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார், திருக்கஞ்சாற்றூர், கீழ் தஞ்சை - செருத்துணை நாயனார் அவதார தலம் போன்ற தலங்களில் மிகவும் எளிமையான முறையில் தான் குரு பூஜைகள் நடைபெறுகின்றன.
சற்றே யோசித்து பார்க்க வேண்டும், திருமயிலை குரு பூஜை போல் அத்துனை தலங்களிலும் வெகு சிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றால் எத்துனை புன்னியம் செய்தோமோ கண்ணால் கண்டு அகமகிழ......
இது எப்படி சாத்தியம்? என்றால்; கட்டாயம் மிக எளிமையான முறையினால் சாத்தியம் என்றே கூறலாம். இன்று தமிழகமெங்கும் பல சைவ அமைப்புகளும், உழவார பணிக் குழுக்களும் வளர்ந்து ஓங்கி பற்பல தொண்டுகள் செய்து வருகின்றனர், இரண்டு மூன்று அமைப்புகள் இணைத்து சுமார் ரூபாய் 20,000/- பொருட்செலவிலேயே நாயனாருக்கு மகா அபிஷேகம், பூ மாலை சாத்துப்படி, சிவாச்சாரியார் சம்பாவனை, ஓதுவார் சம்பாவனை, மெய்க்காவல் உதவி, குருக்கள் ஓதுவார் மெய்க்காவல் வஸ்திர தானம், பழ வகைகள், வஸ்திரம், ஓதுவார் அன்னம்பாலிப்பு என நிறைவாய் வழிபாட்டினை செய்திடலாம். ஆண்டு தோறும் ஒரு நாயனார் குரு பூஜை இந்த திருத்தலத்தினில் எங்களது பொறுப்பு என்று சைவ அமைப்புகள் செயல்படலாமே, அடியார்கள் புடை சூழ அந்த தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளலாமே...
இது போன்று தலங்களில் சிவாச்சாரியார்கள் செவ்வனே வழிபாட்டினை செய்து தர தயாராக உள்ளனர், காத்து உள்ளனர், நாம் தான் நாடிச் சென்று அணுக வேண்டும்....
நமது நால்வரின் பாதையில்.. யாத்திரை குழு சார்பாக 2019 ஆம் ஆண்டு முதல் நால்வர் பெருமக்கள் குருபூஜைகளை கிராமத்து திருமுறை தலங்களான திருப்புள்ளமங்கை, திருக்கானூர், திருவெண்பாக்கம், திரு குரங்கணில் முட்டம், திருக்கச்சி நெறிக்காரைக்காடு, திருவிஜயமங்கை, திருகருக்குடி, திரு கிளியனூர் போன்ற தலங்களில் சிறப்பாக வழிபாடு செய்திட திருவருள் கூட்டுவித்தது.
இங்கே உள்ள சிவாச்சாரியர்களின் அன்பும், அர்ப்பணிப்பு தன்மையும் வார்த்தைகளால் சொல்லி மாளாது.... நாயனார்மார்கள் அவதரித்த மற்றும் முத்தி பெற்ற இத் திருத்தலங்களை போற்றியும், அங்கே நாயனார் குரு பூஜை வழிபாட்டை செவ்வனே முன்னெடுத்து செய்வது நமது கடமையல்லவா...
முயன்றால் முடியாதது எதுவும் இல்லையே....
63 நாயன்மார்கள் அவதார முத்தி திருத்தலங்களை வகைப்படுத்தி ஒரு காணொலி வடிவினில் படைத்துள்ளோம், அன்பர்களுக்கு உதவியாக அமையும் என நம்புகின்றோம்.
https://youtu.be/JBrRn6SlQI8
இத் திருத்தலங்களை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு அடியேனை தொடர்பு கொள்ளலாம், அடியேன் அறிந்த அளவில் உதவுகின்றேன்.
நன்றி
அன்புடன்,
சைதை சு. சுரேஷ் பிரியன்
9500064880
இந்த காணொலியின் நோக்கம் 1.நாயன்மார்களின் அவதார முக்தி திருத்தலங்களை பெரிய புராணம் காட்டிய வழியில் திண்ணமாய் அ....